திங்கள், 22 ஏப்ரல், 2013

வேடனின் ஆன்மிக வாழ்க்கை

இமாசலம்

வானாறும் தேனாறும் பாய விண்ணளவு வீறு கொண்டு ஓங்கி நிற்கின்றுது இமாசலம், அங்கே சித்தர்களும் முத்தர்களும் கட்டை போல அசைவற்று அரிய பெரிய தவம் செய்கிறார்கள். பலப் பல வகையான நிறங்களும் நறுமணங்களும் உடைய மலர்களைப் பூத்து அணியணியாக மரங்கள் நிற்கின்றன. கொடிய விலங்குகள் இரவு பகலாக இரை தேடி உலாவுகின்றன. சிங்கமும் யானையும் போர் புரிகின்றன. காண்டாமிருகங்கள் கர்ஜிக்கின்றன. மயில்கள் அசைகின்றன; குயில்கள் கூவுகின்றன; பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சுகின்றன. கற்புடைய மாந்தர்களை போல் பூங்ககொடிகள் நெளிந்து நிற்கின்றன. இலைகளும் பூக்களும் உதிர்ந்து தரை மெத்தென்று காட்சி தருகின்றது.

ஆகுகன்

இத்தகைய மாட்சியுடன் காட்சி தருகின்ற பணிமலையில் ஆகுகன் என்ற வேடர் தலைவன் வாழ்ந்து வந்தான். ஆகுகன் தோள்வலிமையும், வாள்வலிமையும் மிகுந்தவன். இருண்டு சுருண்ட தலைமயிரும், முறுக்கிய மீசையும், தருக்கிய சிந்தையும், பொருப்பன்ன தோளும், செருப்பணிந்த காலும் படைத்தவன்.

அவனுடைய பார்வையில் வீரமும், உள்ளத்தில் ஈரமும் தவழ்ந்தன; தேனும் ஊனும் உண்டு பருத்த உடம்பும், கறுத்த நிறமும் கொண்டு, எப்போதும் வில்லேந்தியவனாய் உலாவுவான்.

அவன் வேட்டையாடும்போது, மக்களுக்குத் தீங்குபுரிகின்ற விலங்குகளையே கொல்லுவான். விலங்குக்குட்டிகளையும், வயது முதிர்ந்த விலங்குகளையும், சாதுவான விலங்குகளையும் கொல்லமாட்டான். அவ்வழி வந்த சாதுக்ககளுக்குத் தேனும் தினைமாவும் தந்து உபசரித்து வழியனுப்புவான்.

ஆகுகி

இந்த வேடவேந்தனுடைய மனைவி ஆகுகி. இவள் கணவனுடைய கருத்தறிந்து ஏவல் செய்வாள். கணவனுடைய சொல்லை வேதவாக்காகச் சிரமேற்கொண்டு நடப்பாள். கணவன் வேட்டையாடிக் கொண்டுவந்து தருகின்ற ஊன்களைப் பக்குவம் செய்து, தேன் கலந்து சுவையூட்டிக் கணவனுக்குக் காலம் தவறாது தருவாள். பாவச் செயல்களுக்குக் கூசுவாள். பாலமுதம்போல் இனிமையாகப் பேசுவாள். பிறர் துன்பம் களையும் கருணையுள்ளம் படைத்தவள்.

ஆகுகனும் ஆகுகியும் ஒருவர்மீது ஒருவர் பற்று வைத்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இருவரே தங்கக்கூடிய குகையில் அவர்கள் வாழ்வு நீண்ட காலமாக அமைந்திருந்தது. நல்ல மனைவி நமக்குக் கிடைத்தாளே என்று கருதி ஆகுகன் ஆனந்த மடைவான். உத்தமனான கணவனை நாம் பெற்றோம் என்று எண்ணி எண்ணிப் பெருமிதம் அடைவாள் ஆகுகி. சில வேடர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு பொறாமைப் பட்டார்கள்.

சாது முனிவரின் சந்திப்பு


காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சர்யம் என்ற ஆறு பகைவரையும் வென்றவரும். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தியவரும், அருமறையில் வல்லவரும், திரு நெறியில் நின்றவரும், திருநீறு பூசிய நெற்றியும், கண்டிகை தவழும் திருமார்பும் தாழ்ந்த சடைக்கற்றையும், யோகதண்டம் ஏந்திய கரமும், கருணை பொழிகின்ற கண்களும் உடைய ஒரு சாது முனிவர் ஒருநாள் மாலைவேளையில் அங்கு வந்தார்.


அருந்தவ முனிவரைக் கண்ட ஆகுகன் அன்புடன் பணிந்தான்.

‘தபோதனரே! தங்கள் வரவு நல்வரவு. தங்களைக் கண்ட கண்கள் நல்ல கண்கள். கொடிய விலங்குகள் உலாவுகின்ற கொடிய கானகம் இது. நஞ்சுடைய நாகங்கள் நிறைந்த வனம். பல கல் சுற்றளவுள்ள இந்த மலைக்காட்டுக்கு நீர் வந்துவிட்டீர். இப்போது மாலை நேரம். இரவிலேதான் விலங்குகள் இரைதேடி மிகுதியாக உலாவும். காட்டைக் கடந்து போகுமாறு உம்மை விடுவதற்குப் போதிய நேரம் இல்லை. பெரிய துன்பம் நிறைந்த இந்தக் காட்டுக்கு ஏன் வந்தீர்? தங்களுடைய நற்காலத்தால் நான் தங்களைச் சந்தித்தேன். அடியேன் குடியிருக்கும் குகைக்குச் சீக்கிரமாக வாருங்கள். இன்றிரவு அங்கே தங்கி நாளைக் காலை புறப்பட்டுப் போகலாம்” என்று அவருக்கு இன்னுரை கூறி, முனிவரைத் தன் குகைக்கு அழைத்துச் சென்றான். ஒடுக்கமாக உள்ள குகைக்குள் மான் தோலை விரித்து முனீந்திரரை நிருத்தி ஆகுகனும் ஆகுகியும் பல முறை பணிந்தார்கள். அவருக்கு பலாச் சுளைகளைத் தேனில் கலந்து உண்பித்தார்கள். தேன் கலந்த தீஞ்சுவைத் தண்ணீர் தந்து. இன்முகம் காட்டிக் கனியமுதமன்ன இனிய மொழிகள் கூறி உபசரித்தார்கள்.

முனிவர் பெருமான் அவர்களின் அன்பைக் கண்டு அகமிக மகிழ்ந்தார்; ஆசி கூறினார். ‘வெட்டு, குத்து, அடி, உதை, கொல்லு என்று கர்ஜனை புரிகின்ற கொடுங்குணம் படைத்த வேடர்குலத்திற் பிறந்த இவர்கள். நம்மிடம் தாயினும் சாலப் பரிந்து அன்பு செய்கிறார்களே! இது பேராச்சிரியம். ஆ! என்ன அன்பு! எத்தனை பண்பு! முன்பின் அறியாத என்னிடம் பல காலம் பழகியவரைப் போல் அன்பு செய்கின்றார்கள். இவனுடைய குலத்துக்கும் குணநலத்துக்கும் சம்பந்தமே இல்லை’ என்று முனிவர் எண்ணினார்.

அறிவுரை

முனிவர், “அம்மா! அப்பனே! உங்கள் மனம் பால் போன்றது. உங்களை மனப் பூர்வமாக வாழ்த்துகின்றேன். உங்களுக்கு மங்களம் உண்டாவதாக. ஓர் உத்தமமான தத்துவத்தை உங்களுக்கு உபதேசிக்கின்றேன். ஒருமைப்பட்ட உள்ளத்துடன் கேளுங்கள்.

“அறிவுடையவன் அறிவுடையவனிடம் சேருவான். இனம் இனத்துடன் சேரும்; குடியன் குடியனுடன் சேருவான்; பொடியன் பொடியனுடன் சேருவான்; தடியன் தடியனுடன் சேருவான்; கள்ளன் கள்ளனுடன் சேருவான். இதுதான் உல நியதி. இந்த உடம்பு அசித்து (அறிவில்லாதது) உயிர் சித்து (அறிவுடையது). சித்து சித்துடன் சேரும். அசித்து அசித்துடன் சேரும். ஆனால் இந்த நியதிக்கு மாறாக, உயிராகிய சித்துப் பொருள் உடம்பாகிய அசித்துடன் சேர்ந்துள்ளது.

“மாட்டு வண்டியைப் பாருங்கள். மாடு சித்து; வண்டி அசித்து. மாடு தானே சென்று வண்டியில் நுழையாது; வண்டியும் தானே போய் மாட்டின் மேல் ஏறாது. எப்படி மாடும் வண்டியும் ஒன்றுபட்டுள்ளன? வண்டிக்கும் மாட்டுக்கும் எஜமான், மாட்டை இழுத்துப் பிடித்து வண்டியின் நுகத்தடியை மாட்டின் கழுத்தில் வைத்துப் பூட்டாங் கயிறு பூட்டி, வண்டியில் அமர்ந்து அதனைச் செலுத்துகின்றான்”.

இது போல் அந்த அந்த உயிர்களை, அதனதன் கர்மங்களுக்கு ஏற்ப அந்த அந்த உடம்புக்குள் சேர்த்துப் பிராணவாயுவாகிய பூட்டாங்கயிற்றைப் பூட்டி இறைவன் உள்ளே அந்தர்யாமியாக இவற்றைச் செலுத்திக்கொண்டிருக்கின்றான். கடவுவதாலே கடவுள் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டுது.

“அவிழ்த்து விடுகின்ற நேரம் மாட்டுக்கும் தெரியாது; வண்டிக்கும் தெரியாது. அதுபோல் இந்த உயிர் உடம்பினின்றும் பிரிகின்ற காலம் யாருக்கும் தெரியாது. ஜோதிட நூல் வல்லான் தடபுடலாக ஜாதகக் குறிப்பைப் பார்த்துச் சண்டப் பிரசண்டமாகப் பலாபலன்களைக் கூறுவான். ஆனால் உயிர் பிரியும் மரணத்தை நிச்சயிக்க முடியாது”.

“அதலால் உயிர் பிரிகின்ற மரணம் வருமுன் இறைவனுடைய சரணத்தை அடையவேண்டும். இதுதான் வேதரகசியம். வேத இருதயமாக விளங்குவது ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து. இதனை நீவிர் ஓதி உய்வு பெறுங்கள்” என்று நுட்பமான தத்துவத்தை இனிது உபதேசித்தருளினார்.

தியாக சிகரம்.

இரவு 11 நாழிகை. உறங்க வேண்டிய நேரம். அந்தக் குகையில் இருவர் மட்டும்தான் உரங்கமுடியும். மூவர் உறங்க முடியாது.

ஆகுகன் முனிவரை நோக்கி மொழிகின்றான்; “ஞனத் தந்தையே! இந்தக் குகையில் இருவர் மட்டுமே படுக்க முடியும். நானும் இவளும் படுத்து, தேவரீர் வெளியே படுத்தால், விலங்குகள் உம்மைக் கொன்றுபோடும். தேவரீரும் நானும் படுத்து, இவள் வெளியே படுத்தால் அபலையாகிய இவளைச் சிங்கம் புலி முதலிய கொடிய விலங்குகள் கொன்றுவிடும். நான் ஆயுதபாணி. நான்தான் வெளியே இருக்க வேண்டும்.

தாங்கள் ஆசாபாசமற்ற அருந்தவச் சீலர். இவள் பரம பதிவிரதை. தந்தையும் மகளும் ஒன்றாக இருக்கலாம். பிழையில்லை. எனவே நீரும் இவளும் உள்ளே படுத்து உறங்குங்கள். அடியேன் ஆயுதம் ஏந்தி வெளியே இருப்பேன்” என்றான்.

மாதவ முனிவர் வேடனுடைய மாசற்ற மனப்பண்பை எண்ணி அக மகிழ்ந்தார். “என்ன பண்பு! என்ன தியாகம்! மனைவியுடன் மற்றொருவன் தனிமையில் இருக்க எவன் உடன்படுவான்? இவனைப் போன்ற உத்தமர்களைக் காண்பது அரிது” என்று எண்ணி இதயம் உருகினார். அவனுடைய வேண்டுகோளை மறுக்க இயலாது அன்புக்குக் கட்டுப்பட்டார்.

குகைக்குள்ளே முனிவரும் ஆகுகியும் படுத்தார்கள். கதவை மூடி, வில்லேந்திய கையுடன் குகைப்பாறை மீது சாய்ந்து இமையாது நின்றான் ஆகுகன். திருஐந்தெழுத்தை உச்சரித்தவண்ணம் முனிவர் உறங்கினார். பதியின் பதமலரைச் சிந்தித்த வண்ணம் ஆகுகி கண்ணயர்ந்தாள்.

நடுஇரவு, எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. நாயும் பேயும் உறங்குகின்ற நேரம். வேடனும் சிறிது கண்மூடி நின்ற வண்ணமே உறங்கிவிட்டான். கையிலிருந்து வில் நழுவி விட்டது. இரைதேடி வந்த சிங்கம் அவனை அடித்துக் கொன்று தின்றுவிட்டுச் சென்றது.

விடியற்காலை. கணவனைச் சிந்தித்த வண்ணம் ஆகுகி கண்விழித்தாள். சிவத்தைச் சிந்தித்த வண்ணம் முனிவர் விழித்தார். ஆகுகி கதவைத் திறந்து வெளியே வந்தாள். எலும்பு கூடாக இருந்த கணவனைக் கண்டாள். அவள் உத்தமபத்தினி. “ஆ! பிராணநாதா!” என்று அலறினாள்; கணவனுடைய எலும்புக் கூட்டின் மீது சாய்ந்தாள்: அக்கணமே மாய்ந்தாள். முனிவர் இந்த அவலக் காட்சியைக் கண்டு வருந்தினார்.

“அந்தோ! விதி செய்த விளையாட்டு என்னே! நம்மால் இந்த இருவரும் மாய்ந்து விட்டார்கள். பெற்ற பிள்ளைகளைப் போலே இடம் தந்து, உணவு தந்து, இன்சொல் கூறி உபசரித்த இவர்கள் முடிவு பெற்றார்கள். நான் மாண்டிருந்தால் யாருக்கும் நஷ்டம் இல்லை. இந்த வேடர் பெருமான் பரம உபகாரி. இந்தக் காட்டுக்கு வரும் வழிப்போக்கர்களுக்கு நலம் செய்பவன். கணவன் மறைந்த கணமே இவள் உயிர் துறந்தாளே? எத்தனை அன்பு!” என்று கூறிப் புலம்பியழுதார்.

ஓமாக்கினியை வளர்ந்தார்; மந்திர நீரால் இரு உடம்புகளையும் அலம்பினார். கட்டைகளை அடுக்கி இரு உடம்புகளையும் வைத்து ஓமாக்கினியை வைத்து மூட்டினார். இரு பிணங்களும் தீயில் வேவதைப் பார்த்து அவரால் துயரம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த எரியும் நெருப்பில் அவரும் மூழ்கி விட்டார். மூவருடைய ஆன்மாக்களும் சாந்தியடைந்தன.

முனிவருக்கு உணவும் இடமும் தந்த தியாகத்தின் பயனாக ஆகுகன் என்ற வேடன் நளச் சக்கரவர்த்தியாகப் பிறந்தான். கற்புடைய ஆகுகி தமயந்தியாகப் பிறந்தாள். முனிவர் பெருமான் அன்னமாகப் பிறந்து, தம்மால் பிரிந்த தம்பதிகளைத் தூது சென்று ஒன்றுபடுத்தினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக