செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உனக்குள் ஓர் உன்மை


யாரோ தின்று முடித்து வீசி எறிந்த மாங்கொட்டையில் இருந்து ஒரு மாபெரும் விருட்சம் எழுகிறது. காக்கையின் எச்சத்தில் உள்ள சிறு விதையில் இருந்து ஒரு புதிய வேப்ப மரத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது.

வானமழையில் ஏதோ ஒரு துளி, தான் விழுவது எங்கென்று தனக்கே தெரியாமல் சிப்பிக்குள் விழுந்து முத்தாய் விளைகிறது.

வாசற்படியாகப் போகிறதோ? தெய்வச்சிலாயாகப் போகிறதோ?. இது எந்தக்கல்லுக்குதான் முன்கூட்டியே தெரியும்.

டிக்கெட் வாங்காமல் ரெயில் ஏறி பட்டணத்திற்கு வந்தவன், பின்னாளில் தேர்தலில் நிற்பதற்கான டிக்கெட் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விடுகிறான். ஊரைவிட்டு விரட்டப்பட்டவன், மேள வாத்தியங்களுடன் மாலை மரியாதையோடு பின்னாளில் வரவேற்கப்படுகிறான்.

இவையெல்லாம் எப்படி? எது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அதிர்ஷ்டம் கூட தகுதியின் அடிப்படையில் தான் கிட்டுகிறது. அதிர்ஷ்டம் என்பதை வாய்ப்பு என்றும் சொல்லலாம்.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உழைப்பு முன்னேற்றத்திற்கான நடைமுறையாக இருக்கிறது. அதிர்ஷ்டம் வெறும் கற்பனையாக இருக்கிறது.

யார் என்ன சொன்னால் என்ன? எந்தச் சூழ்நிலை வந்தால் என்ன? நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களுக்குரிய வாய்ப்புகள், உங்களுக்குரிய எதிர்காலம் உங்களைத் தேடி வராமலா போய்விடும்.

நெப்போலியன் குடுப்பத்தில் வறுமைதான். குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லாத நிலை. மற்ற மாணவர்கள் அவனைப்பார்த்துக் கிண்டல் செய்வார்களாம். அப்போது தெல்லாம் நெப்போலியன் தனது புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கிவிவானாம்.

காலம் மாறியது. ஏளம் செய்த மாணவர்கள் வியக்கும் அளவிற்கு அறிவில் சிறந்தான். ஆற்றலில் சிறந்தான். பின்னர் உலகமே புகழும் மாவீரனாகத் திகழ்ந்தான் என்பது வரலாறு.

நெப்போலியன் தனக்குள் இருந்த தன்னை- அந்த உண்மையைக் கண்டு கொண்டான். வரலாற்றில் இடம் பிடித்தான்.

பீத்தோவன் என்றால் யாரென்று உலகம் நன்கறியும். மாபெரும் இசைமேதை. அவர் செவிடாகவும் துக்கத்தில் ஆழ்ந்தவராகவும் இருந்தபோது தான் தனது மிகச்சிறந்த இசைப்படைப்புகளை உருவாக்கினார்.

அந்த மாமேதை தனக்குள் தான் யாரென்பதைக் கண்டுக் கொண்டார். அந்த உண்மையை இசை வடிவங்களாய் வார்த்துக் கொடுத்தார்.

நம்மைப்பற்றி உலகம் என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்பது விஷயமல்ல. நம்மைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம், நம்மைப்பற்றி நம்முடைய உன்மையான மதிப்பீடு என்ன என்பதுதான் முக்கியம்.

ஹென்றிச் ஹீன், சென்ற ஙூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானியப் புரட்சிக் கவிஞன், ‘I am the Sword: I am the flam’ என்று பாடினார்.

அவர் தனது மரணத்திற்கு முன்னால் இப்படி எழுதி வைத்துச் சென்றார்.

‘நான் இறந்தபின், என் சமாதியின் மீது மலர்களை வைக்காதீர்கள்; மாறாக ஒரு வாளை நட்டு வையுங்கள். ஏனெனில், நான் எப்போதும் மனித குலத்தின் விடுதலைக்குப் போராடிய போராளியாகவே இருந்தேன்’.

அந்தக் கவிஞன் தன்னைத் தெரிந்திருந்தான். அதனால்தான், தான் யாரென்பதை உலகிற்கு அவனால் சொல்ல முடிந்தது. நம்மை நாம் அறியாவிட்டால் உலகம் நம்மை அறிய முடியாது.

கிரிக்கெட் மட்டையைக் தூக்கிக்கொண்டு ஆக்கி விளையாடச் செல்பவன் இரண்டிலும்  தேறாதவன். நிலத்தின் தன்மையறிந்து விதைக்காதவன் வாழத்தெரியாதவன்.

உண்மையை நாம் எப்பேது உணர்ந்து கொள்கிறோமோ அப்போதுதான் நாம் வாழ்வைத் தெரிந்து கொள்கிறோம். உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் காணத் தெரியாமல் இருக்கும்வரை, வாழ்க்கை வெறும் மாயையாகவே தோன்றுகிறது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த காலம் அது. நாடகம் காண வரும் ரசிகர்களைப் பற்றிய ஒரு செய்தி அது. அதாவது ‘ரோமியோ அன்ட் ஜூலியட்’ , ‘ஹாம்லெட்’ , ‘மாக்பெத்’ ஆகிய நாடகங்களைப் பார்த்துவிட்டு சீமான்களும் சீமாட்டிகளும் கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியே வருவார்களாம். அரங்கத்திற்கு வெளியில் கடுங்குளிரில் நடுங்கியபடி அவர்களுக்காகக் காத்துக்கிடக்கும் சாரட் ஓட்டிகளைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்களாம்.

இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். வால் போஸ்டர்களைப் பார்த்துக் கும்பிட்டு நிற்பார்கள். ‘கட்அவுட்’ களுக்கு அபிஷேகம் செய்வார்கள். ஆனால் அவர்கள் தங்களைப்பற்றித் துளியளவும் சிந்தனை இல்லாதவர்கள். தங்களை யாரென்று அறிந்து கொள்ளதவர்கள்.

தன்னைத்தானே எவன் அறிந்து கொள்கிறானோ, அவன் தனக்குள் உன்மையின்  ஒளியைக் காண்கிறான். அவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிறுவயதிலேயே அபாரமான அறிவுக்கூர்மை, அற்புதமான நினைவாற்றல். அவரது தந்தை அவரை தமது மடிமீது அமர்த்திக்கொண்டு, தமது மன்னோர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிடுவார்.

அவை அனைத்தும் மிக நீளமான பெயர்கள். எனினும், ராமகிருஷ்ணர் அவைகளை ஒருமுறை கேட்டதும் நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்வார். தப்பேதும் இல்லாமல் அப்படியே திரும்பச் சொல்வார்.

தோத்திரப்பாடல்கள், ராமாயண, மகாபாரதக் கதைகள் என்று ராமகிருஷ்ணருக்கு அவரது தந்தை தினந்தோறும் கூறுவார். அவற்றை கேட்டபடியே கூறும் ஆற்றல் மிகச்சிறுவயதிலேயே ராமகிருஷ்ணரிடம் இருந்தது.

ஆனால் அவருக்கு கணிதமோ காத தூரம். அவரது தந்தை எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. ஆர்வமும் இயல்பான விருப்பமும் இல்லாததால், கணிதத்தை நினைவு வைத்துக்கொள்ள ராமகிருஷ்ணர் விரும்பவில்லை. நியாயம் தானே.

உங்கள் மனதிற்கு ஒவ்வாத ஒன்றை உங்கள் மீது திணிப்பதற்கு யாரையும் அனுமதிக்காதீர்கள். நிழலுக்கு ஒதுங்கியவன் விரும்புகிறான் என்பதற்காக புளியமரம் பப்பாளிப் பழங்களைத் தரமுடியாது.

உங்களுக்குள் ஓர் ‘உண்மை’ இருக்கிறது. அந்த ‘உண்மை’ தான் நீங்கள். அதை நீங்கள் உணர்ந்து கொண்டுவிட்டால், அதன்பின் குழப்பத்திற்கு வழியே இல்லை.

அறிவியல் பாடத்தில் வெறும் முப்பத்தைந்து மதிப்பெண்களை எடுத்தவன், மருத்துவக் கல்லூரியை நினைக்கூடாது. யாரும் அவனை நிர்பந்திக்கவும் கூடாது. ஏனெனில், அது ஆபத்தான விஷயம்.

அறிவியல் தான் வாழ்க்கை என்றில்லை. கலை, இலக்கியம், சட்டம், கணினி, தகவல் தொழில்ஙுட்பம் என எத்தனையோ துறைகள் உள்ளன. எந்தத்துறையில் சாதிக்க முடியுமோ, அந்ததுறையில் ஙுழைவதுதான் வெற்றிக்கு வழி.

சிலர் எதைஎதையோ நினைக்கிறார்கள். எப்படிஎப்படியோ கணக்குப்போடுகிறார்கள். தப்புத்தப்பாய் முடிக்கிறார்கள்.

அங்குமிங்கும் அலைவது முக்கியமல்ல. உங்கள் நிலை என்ன என்பது தான் முக்கியம். அதில் நீங்கள் தெளிவுடன் இருந்தால், வெற்றி உங்களுக்குள்  இருந்து துளிர்விடும்.

ரஷிய நாட்டு மனிதன் ஒருவன் விண்வெளியை அடைந்தான். அப்போது குருஸ்ரஷேவ், ‘என் நாட்டு மனிதன் சந்திரனை வட்டமிட்டுவிட்டான். அங்கு எந்த சொர்க்கத்தையும் அவன் காணவில்லை’ என்று வானொலியில் சொன்னார்.

உண்மைதான். மேலே எங்கும் சொர்க்கம் இல்லை. கிழே எங்கும் நரகம் இல்லை. அவை இருவேறு நிலைகள். உங்கள் மனத்தின் வழி வாழ்வின் நிலையே சொர்க்கம் அல்லது நரகம்.

எனவே உங்களுக்குச் சம்பந்தமில்லாதவைகளில் மூக்கை ஙுழைத்து, வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளாற்றலை உணர்ந்து. அந்த ஆற்றலை வளப்படுத்திப் பாருங்கள். நீங்கள் பேசப்படுவீர்கள்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு ஐந்து வயது நிரம்பியது. தமிழ் கற்க அவரைத் தன் குருவிடம் சேர்த்தார் அவரது சகோதரர். ஆனால் ராமலிங்கமோ கல்வி கற்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு கந்தசாமி கோவிலுக்குச்செல்ல ஆரம்பித்தார். அங்கு நீண்ட நேரம் மெய்மறந்து தியான நிலையில் நிற்பாராம்.

ஏட்டுக் கல்வியின் மீது அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. ஆனால் மிக இளம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். தமது ஒன்பதாவது வயதில், ‘ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கன்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று அவர் எழுதிய பாடல் இன்றுவரை அனைவராலும் விரும்பிப்பாடப்பட்டு வருகிறது.

தன்னைத்தான் உணர்ந்து கொள்ளாதவன் தலைநிமிர்ந்து வாழமுடியாது. தன் ஆற்றலை தன் அடையாளமாக்கிக் கொண்டவனின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. உனக்குள் ஓர் ‘உண்மை’ இருக்கிறது. அந்த ‘உண்மை’ தான் நீ.

நண்பனே,
நீ வீசி எறியப்பட்டாலும்.,
விழுந்த இடத்தில் இருந்து
விருட்சமாய் எழுந்துகாட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக