செவ்வாய், 23 ஏப்ரல், 2013

துவாரகை தரிசனம்

ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் நூறு வருடங்கள் வாழ்ந்தார்.

அவர் துவாரகையில் இருந்தபோது எட்டு பேரைத் தமது பட்டத்தரசிகளாக ஏற்று மணந்து கொண்டார்.

ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, நக்னஜீவி, சத்யா, பத்ரா, காலிந்தி, லஷ்மணா ஆகியவர்களே அவரது அந்தப் பட்டத்து ராணிகள்.

துவாரகையில் அவர் தமக்குப் பொன்னாலான ஓர் அரண்மனையை அமைத்துக் கொண்டே தோடு, தமது ராஜ்யத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

ஒரு நூலுக்கு 999 புடைவைகள் வீதம் வழங்கி திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றியதும் ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் இருந்த போதுதான் நடைப்பெற்றது.

துவாரகையில் இருக்கும்போதுதான் அவர் சுதாமா என்ற குசேலரின் வறுமைப் பிணியையும் நீக்கினார்.

குசேலருடைய ஊர் போர்பந்தர் – மகாத்தமா காந்தி பிறந்த ஊர்.

போர்பந்தருக்கு  சுதாமாபுரி என்ற பெயரும் உண்டு.

கடைசியாக அவர் குருஷேத்திரப் போரில் அர்ஜூனனுக்கு கீதையை அருளினார்.

துவாரகை ராஜ்யத்தில் யாருக்கு என்ன துயர் ஏற்பட்டாலும் ஸ்ரீ கிருஷ்ணர் விரைந்து சென்று துன்பம் களைத்து. மக்கள் போற்றி வணங்கும் மன்னனாகச் செயல்பட்டார்  என்பதற்கு ஆதாரமாகப் பல கதைகள் சொல்கிறார்கள்.

ஸ்தூலமாக அவர் உலகில் வாழ்ந்தபோது செய்ததைக் காட்டிலும், மறைந்த பிறகும் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அவர் அருள் புரிந்து வருவதை மகான்களும், பக்கதர்களும் புனித நினைவுகளாகப் போற்றி வருகிறார்கள்.

பாரதப் போர் முடிந்த பிறகு, தூர்வாசரின் சாபத்திற்கிணங்க யாதவ வம்சத்தின் அழிவுக்கும் அவரே வழி வகுத்தார். பதவியும், பணமும், ஆதிக்கமும் போதையேற்ற யாதவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு மாண்டொழிந்தனர்.

கொளரவர்களைப் பறி கொடுத்த காந்தாரியின் சாபத்தின்படி தானும் மரணம் ஏற்கத் துணிந்தார்.

இந்தச் செய்திகளெல்லாம் அவர் சமுதாய நலனை எவ்விதம் பாதுகாத்தார், சமுதாயப் போக்கைக் கணிப்பதில் எவ்வளவு வல்லவராக விளங்கினார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. அந்த உத்தமருடைய ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து அனுபவித்து ஆராயும்போது நாம் இந்த முடிவுக்குதான் வர முடியும்.

அநார்த்தம் என்ற மாநிலத்தில் துவாரகா இருந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த அநார்த்தம்தான் பின்னால் சொளராஷ்டிரம் என்று பெயர் பெற்றது.

ஹரி வம்சம் துவாரகாவைப் பற்றி ஏராளமான விவரங்களை நமக்கு தருகிறது.

முதுராவிலிருந்து அநார்த்தம் வந்து சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் கருடனிடம் தாம் தங்குவதற்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தரும்படி கேட்டார்.

தன் சிறகுகளை அகல விரித்துப் பறந்த கருடன் கடைசியில் குசஸ்தலி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தார். கண்ணனும் கருடனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் குசஸ்தலி அளவில் சிறிய பரப்பாக இருந்தது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் சமுத்திர ராஜனை வேண்ட, அவனும் கடலை ஒதுக்கி மேலும் 12 யோஜனை (ஒரு யோஜனை ஓன்பது மைல்) நிலப்பரப்பை அளித்தார்.

கண்ணன் தனக்குக் கிடைத்த நிலப்பரப்பில் துவாரகையை நிர்மாணித்தார். அதில் நான்கு யோஜனை தூரத்தில் தமது அரண்மனையை அமைத்துக் கொண்டார்.

ஊரையும் அரண்மனையையும் அவர் மிகவும் திட்டமிட்டு நிறுவியதாகச் சொல்லப்படுகிறது.

ஹரிவம்சத்தின்படி துவாரகாவுக்கு கிழக்கிலும் வடக்கிலும் கடல் இருந்ததாம். மேற்கே கடலுடன் இணைந்த சிற்றூரும், தெற்கே ரைவதக் என்ற குன்றும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டதட்ட துவாரகா ஒரு தீவில் இருந்தது என்றே சொல்லக் கூடும்.

ஸ்ரீமத் பாகவதம், 12 யோஜனை சுற்றளவுள்ள ஒரு கோட்டை கட்டப்பட்டதாகவும் அதில் துவாரகா இருந்ததாகவும் அறிவிக்கிறது.

இந்த கோட்டை குறிப்பாக எங்கே இருந்தது என்ற விவரம் பாகவதத்தில் இல்லை.

கிருஷ்ணன் அகழி சூழ்ந்த கோட்டை ஒன்றை கட்டினார் என்றும், அகழிக்கு மேல் ஆங்காங்கே பாலங்கள்  கட்டுவித்தார்  என்றும் கதைகளுண்டு.

கண்ணன் துவாரகாவைச் செழிப்பானதாக ஆக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கிருஷ்ணன் காலத்திலேயே சிசுபாலன் துவாரகாவுக்குத் தீ வைத்ததாகவும், பின்னால்  அவன் நண்பன் சால்வன் துவாரகாவைத் தாக்கியதாகவும் தெரிகிறது. அப்பொழுதெல்லாம் கண்ணன் துவாரகாவில் இல்லை: வெளியூர் சென்றிருந்தார். அவருடைய புத்திரர்கள் தலைமையில் யாதவர்கள், சால்வனைத் துரத்தியடித்து துவாரகாவைக் காத்தனர்.

கிருஷ்ணன் துவாரகா திரும்பியதும் விஷயத்தைக் கேள்வியுற்று சால்வனோடு போர் தொடுத்து அவனைக் கொன்றார் என்கிறது மகாபாரதம்.

இதேபோல் பௌண்டிரன் என்ற அரசனும் துவாரகாவைத் தாக்கியதாக ஹரி வம்சம் தெரிவிக்கிறது.

எல்லாமே ஒரு காலத்தில் அழிய வேண்டியது தானே? உன்னத நிலையைப் பெற்றிருந்த துவாரகாவும் கிருஷ்ணன் சமாதியானவுடன் கடல் கொள்ள அழிந்து போயிற்று.

பாரதப்போரில் புத்திரர்களை இழந்த காந்தாரி மாளத் துயர்த்தில் ஆழ்ந்தாள். அவளுக்கு ஆறுதல்  சொல்லும்படி எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கண்ணன் காந்தாரியிடம் சென்றார்.

கண்ணனைப் பார்த்ததும் காந்தாரி கோபம் கொண்டு சபித்தாள்.-

“நீ தான் மாகாபாரதப் போருக்குக் காரணம், பொறுப்பு. ஆதலால் உன்னை நான் சபிக்கிறேன்: நீ உன் உற்றார் உறவினர்கள் அழிந்து போவதற்குக் காரணமாக ஆவாய். இன்னும் முப்பத்தாறு வருடங்களில் உன் வம்சமே இருக்காது. இழிந்த மரணம் எய்துவாய். இன்று கொளரவர் குலப்பெண்கள் அழுவது போல் யாதவப் பெண்கள் அன்று அழுது அழுது அழிவார்கள்!”

ஸ்ரீ கிருஷ்ணனைத் தவிர வேறு எவராக இருந்தாலும் காந்தாரி இப்படி ஒரு சாபம் கொடுத்ததற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள், சற்று நினைத்துப் பாருங்கள்! கிருஷ்ணன் யோகேசுவரனாயிற்றே – புன்முறுவல் பூத்தார்! காந்தாரிக்கு நன்றி கூறினார்.

“தாங்கள்  என் காரியத்தை மிகவும் சுலபமாக்கிவிட்டீர்கள்.  யாதவர்கள் விபத்துக்குள்ளாகி அழிவார்கள் என்பது நான் அறிந்ததுதான். என்னைத் தவிர வேறு எவரும் அவர்களை அழிக்க முடியாது. அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாவார்கள். இது விதி!” என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.

தானும் தன் சுற்றமும் அழியப் போவதை எதிர்பார்த்து அதை ஏற்றுக்கொள்ளும் அசாதாரணமான மனநிலை, நிதானம் – அதுவும் அப்படியாவது நடப்பதாவது என்று அடித்துச் சொல்லக் கூடிய ஒரு காலக்கட்டத்தில் – அழிவை வரவேற்கும் துணிச்சல் யோகேசுவரனாகிய ஸ்ரீ கிருஷ்ணனைத் தவிர வேறு எவருக்கு இருக்க முடியும்?

சரியாக முப்பத்தாறு ஆண்டுகள் கழிந்தன. பாரதப் போரைப் பற்றி விவாதம் ஒன்று கிளம்பியது. அதில் சாத்யகிக்கும் கிருதவர்மாவுக்கும் அடிதடியாக, யாதவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதன் விளைவாக முடிவில் எல்லோருமே மாண்டார்கள். சாத்யகி பாண்டவர் சார்பாகவும், கிருதவர்மா கௌரவர் சார்பாகவும் பாரதப் போரில் ஈடுபட்டிருந்தனர் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

யாதவர்களின் முடவை அமைதியான சித்தத்தோடு அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன் மகன் பிரத்யும்னன், சாத்யகி ஆகியவர்களின் பினங்களைப் பார்த்ததும் ஆத்திரமடைந்தார். கை முஷ்டியாலேயே அநேக யாதவர்களைக் கொண்றார். இந்த யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய எல்லாப் பிள்ளைகளுமே மாண்டுவிட்டனர். கடைசியில் எஞ்சியிருந்த இரண்டு யாதவர்கள் அவரது கோபத்தை பிரார்த்தனையால் தனியச் செய்தார்கள்.

இங்கே ஒரு முக்கியமான தகவல்: இந்த கலகம் எதனால் ஏற்பட்டது? ஏதேனும் கருத்து வேற்றுமையா காரணம்? இல்லை, இல்லை, குடித்தான் காரணம். கண்ணன் தடுத்திருந்தும் யாதவர்கள் அவன் பேச்சைக் கேளாமல் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள். இன்னும் இது எவ்வளவு பொருந்துகிறது! பணம், பதவி, பலம், போதை – அழிவுக்கு வேறு என்ன வேண்டும்?

சோமநாதர் கோயிலைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். கஜினி முகம்மதுவால் தாக்கப்பட்ட கோவில். அந்தக் கோயில் இருக்கும் சோமநாத் என்ற ஊர் பிரபாஸ் (பிரபாஸம்) என்ற மண்டலத்தில் (நிலப் பகுதியில்) உள்ளது. யாதவர்கள் கண்ணன் சொற்படி இந்தப் பிரபாஸ் பகுதிக்குச் சென்றார்கள். அப்படிச் செல்லும் போதுதான் கண்ணன் அவர்களை மதுவுக்கு அடிமையாகாமல் இருக்கும்படி எச்சரித்தார். யாதவர்கள் அவர் சொல் கேட்காததால் பிரபாஸ் ஷேத்திரத்தில் கூண்டோடு மாண்டனர்.

இந்தப் பிரபாஸ் துவாரகையின் ஆட்சிக்குட் பட்டிருந்தது. இன்று பல புண்ணியத் தலங்கள் நிறைந்து புராணப் பெருமை பெற்ற நிலப்பகுதியாக விளங்குகிறது.

ஸ்கந்த புராணத்தில் ‘பிரபாஸ் காண்டம்’ என்று ஒரு காண்டமே இருக்கிறது.

இப்பொழுது இந்தப் பிரதேசத்தை ‘ப்ரபாஸ் பாடன்’ என்கிறார்கள். பாடனுக்கும் நம்முடைய பட்டணத்துக்கும் எவ்வளவு ஒலி ஒற்றுமை, பார்த்தீர்களா?

யாதவர் மாண்ட நிலையில் கண்ணனின் மனம் வெறிச்சோடியது. காடுகளில் திரிந்து தன் அண்ணன் பலராமனை அடைந்தார். பலராமன் அப்போது லௌகிகத்தை வெறுத்து காட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

யாதவர் அயிந்த செய்தியை கண்ணன் வாயிலாகக் கேட்டு துயர்ததுக்குள்ளாகி அவர் அப்படியே உயிர் விட்டு விட்டார்.

கண்ணன் என்ன நிலையில் இருந்திருப்பார் – என்று சற்று யோசியுங்கள்!

அவர் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஜரன் என்ற வேடன் தவறுதலாக மான் என்று நினைத்து அம்பு எய்ய. கண்ணன் தன் உன்னத வாழ்நாளை முடித்துக் கொண்டு சமாதியானார்.

மகாபாரதம், விஷ்னு புராணம், ஹரிவம்சம், பாகவதம், தேவி பாகவதம் ஆகியவை கண்ணனுடைய முடிவை வர்ணிக்கின்றன. ஆயினும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சில விவரங்களைத் தருகின்றன. எது எப்படியாயினும்,

“இதோ, இவன் ஒரு முழு மனிதனாக வாழ்ந்தான் என்று இயற்கை எழுந்து மார் தட்டிச் சொல்லும் அளவுக்கு மூல தத்துவங்கள் சரியாக அவனிடம் கலந்து பிரகாசித்தன அல்லவா?”

“ஹரி மந்தர் என்னும் கண்ணன் கோயில் ஒன்றைத் தவிர, கண்ணன் காலமானதும் துவாரகாவைக் கடல் கொண்டது” 

இந்த சோக முடிவு நம்முடைய புராணங்களில் மட்டுமின்றி ஜைன பௌத்த நூல்களிலும் காணக் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக