செவ்வாய், 23 ஏப்ரல், 2013

ஸ்ரீராமபிரானின் கருணை


வாலிக்கு ராமன் கருணை காட்டினான் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டால். சூர்ப்பணகைக்கும் அவன் கருணை காட்டினான் என்ற தத்துவத்தை உய்த்து உணரத்தான் வேண்டும்.

சூர்ப்பணகை காட்டில் திரிந்துகொண்டிருந்த அரக்கி; ராவணனின் தங்கை. இவளுக்குப் பகவானின் அருள் கிடைத்தது கிடைத்தற்கரிய பெரும் பேறுதான்.

இவள் கானகத்தில் வேறு மார்க்கமாகப் போயிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் ராமன் இருந்த இடத்தின் வழியாக வந்து ராமனின் தரிசன பாக்கியம் பெற்றது அவளது புண்ணியம்தான்.

ரமிக்கச் செய்பவன் ராமன். பார்த்த மாத்திரத்திலே அனைவரையும் கவர்ந்திழுக்கும் பேரழகு படைத்தவன். “தோள் கண்டார் தோளே கண்டார்” என்பதற் கிணங்க அவனுடைய ஒவ்வொரு வடிவழகும் முழுவதும் காண, கண்டு முடியாத மோகனரூப சௌந்தர்யம். அவனது அசாதாரண வடிவழகில் ஈபட்டுச் சூர்ப்பணகை சொக்கிப் போகிறாள்.

ஓரே குடியில் பிறந்த ராவணன், விபீஷணன், சூர்ப்பணகை மூன்றுபேரும் ராமனிடம் ஈடுபட்டவர்கள்தாம்.

ராவணன் ராமனின் வீரப்பிரதாபத்தில் வீழ்ந்தான்.

விபீஷணன் அண்ணலின் கருணாவிலாசத்தில் ஆழ்ந்தான்.

சூர்ப்பணகை சீதாராமனின் ஜகன்மோகன திவ்ய சௌந்தர்யத்தில் வசியமாகி அவஸ்தைப்பட்டாள்.

அஞ்சொல்இள மஞ்ஞைஎன,
அன்னமென மின்னும்
வஞ்சிஎன, நஞ்சமென,
வஞ்சமகள் வந்தாள்.

சூர்ப்பணகை இவ்வாறு வஞ்சமகள் வடிவம் தாங்கிய நஞ்சு போலவும், மானின் விழி படைத்த மயில் போலவும் ராமன்முன் வந்து நின்றாள்.

அவள் அறியாமையைக் கண்டு அவன் மனம் இரங்கினான். அவளிடம் அவன் அழகாக உரையாடியிருக்கிறான். அவளிடம் அவன் மனம்விட்டுப் பேசியது போல வேறு எவரிடமும் பேசியதில்லை என்றே சொல்ல வேண்டும்.

ராமன் தன் சரிதத்தை உள்ளது உள்ள படியே அவளிடம் தெரிவித்திருக்கிறான்.

இப்படி அவன் தன் சரிதையைத் தன் வாய்மொழியாகச் சொல்லியிருப்பது இந்த ஓர் இடத்தில் தான்.

அத்தகைய பாக்கியம் பெற்றவள் சூர்ப்பணகை. இவ்வளவு பாக்கியம் வாய்த்திருந்தும் அது வீணாகிவிட்டது.

காரணம், அவள் ராமனைப் புரிந்துகொள்ளவில்லை. யாரைத் துணையாகக் கொண்டு ராமனைப் பற்ற வேண்டுமோ அந்தச் சீதாதேவியையே பொறாமையால் விழுங்கிவிடத் துணிந்தாள் சூர்பணகை.

சீதாபிராட்டியின் அருள் பெற்ற விபீஷணன் ராமனை அடைந்து உய்ந்து போனான். இவள் பங்கப்பட்டுப் போனாள். ராமனைக் கிட்டச் சீதாதேவியின் கருணை விலாசம் வேண்டும். ராமபிரான் கருணை கிடைத்தும் பயன்படுத்தாமல் பிழைபட்டுப் போனாள் சூர்ப்பணகை.

“இரக்கம் என்றெரு பொருளில்லாதவர் அரக்கர் என்று உளர் அறத்தின் நீங்கினார்” என்று அரக்கர்களை அறிமுகப்படுத்துகிறார் கம்பர்.
அரக்கர்கள் கருணையே இல்லாதவர்கள். ராமபிரானே கருணையே வடிவானவன்.

கருணையே இல்லாதவர்களிடத்தில் கருணை காட்டுவதுதானே கருணாமூர்த்திக்கு அடையாளம்?

இம்மாதிரி அசாதாரணமான கருணை காட்டுவதனால்தான் காகுத்தன் கருணை என்று சிறப்பித்துச் சொல்கிறோம். விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்தது கருணா விலாசத்தின் உச்சக் கட்டம்.

இந்த அபயப்பிரதானக் கட்டத்தில் சரணாகதியைப்பற்றிய அநேக முக்கியமான தத்துவங்கள் வெளிப்படுகின்றன.

ராமன் இருக்கும் இடத்தையே அயோத்தியாகப் பாவித்து சீதாபிராட்டியின் திருநோக்கு. சீதை ராமனுடன் இணைப்பிரியாமல் இருப்பது அவள் தர்மம்.

அவளை ராமனிடமிருந்து பிரித்துச் சிறை எடுத்துச் செல்கிறான் ராவணன். அது தகாத செயல் என்று தர்மோபதேசம் செய்கிறான் விபீஷணன். அவன் தர்மாத்மா. “பகவான் உடைமையை அவனிடம் ஒப்படைத்துவிடு; இல்லையேல் நீ மட்டுமன்று, அரக்கர் குலமே அழிந்துவிடும்” என்று தர்மத்திற்காக வாதாடுகிறான்.

“நம்முடைய புகழ், செல்வம், சுற்றம் முதலியவை நிலைத்திருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிட வேண்டும். அவ்வாறு விட்டுவிட்டால் அதைப் போல வெற்றி நமக்கு வேறெதுவும் இல்லை” என்று ராவணனிடம் எடுத்துரைக்கிறான் விபீஷணன்.

விபீஷணன் எவ்வளவோ மன்றாடியும் ராவணன் திருந்தவில்லை; மாறாகக் கடும் சினம் கொள்கிறான். தம்பிமனம் நோக இழித்தும் பழித்தும் பேசுகிறான்.

மூர்க்கர்களுக்கு உபதேசம் பண்ணினால் அது பலிக்காது என்பதை விபீஷணன் அறிவான். இருந்தாலும் அவர்களுக்குக் கூடியவரை நன்மை செய்வதுதான் தர்மம் என்பதனால் உடன்பிறந்த சகோதரனை உரிமையுடன் திருத்தப் பெருமுயற்சி செய்தான்.

அதற்குப் பயன் ஏற்படவில்லை. ராவணனுடைய கொடிய வார்த்தைகளைக் கேட்டவுடன். தன் கையிலிருந்த கதையுடனும், தன் மந்திரிகள் நால்வருடனும் இலங்கையை விட்டு கிளம்புகிறான்.

அப்போது ராவணனின் ஆதரவில் தனக்குக் கிடைத்திருந்த மாளிகை, செல்வம் பெண்டு பிள்ளைகள் மற்றும் விட வேண்டிய அனைத்தையும் துறந்து, ககனமார்க்கமாகப் புறப்பட்டுவிட்டான்.

உற்றார் உறவினர்களையும் உரிமைச் செல்வங்களையும் விடுத்து அந்தரத்திலே நிற்கும் விபீஷணன் ‘ஸ்ரீமான்’ என்று போற்றுகிறார் வால்மீகி.

உலகத்தில் மிகுந்த செல்வம் படைத்தவனையே “ஸ்ரீமான்” என்று போற்றுவது வழக்கம. செல்வங்களைத் துறந்த விபீஷணன் ‘ஸ்ரீமான்’ என்கிறார் வால்மீகி. விடவேண்டியவற்றை விட்டவுடனே நிலையான சம்பத்து அதாவது தெய்விகம் வந்தடைகிறது.

அந்த நிலையான சம்பத்துத்தான் ஸ்ரீராகவனின் கருணை அதனால்தான் வால்மீகி அந்தப் பேரருளாளனை (போரருளுக்கு ஆட்பட்டவனை) ஸ்ரீமான் என்று போற்றிப் பாராட்டுகிறார்.

இலங்கை மண்ணை உதறிவிட்டு மேலே இருந்தவாறே மறுபடி ராவணனுக்கு உபதேசம் செய்கிறான் விபீஷணன்.

‘ஐயோ! அநியாயமாய் அடியோடு அண்ணன் அழிந்து போகிறானே! என்ற கருணையினால் அவ்விதம் செய்கிறான்.
நெருப்பினால் வெந்துபோன வீட்டில் ஏதேனும் ஒரு குச்சியாவது அகப்படாதா என்று துருவிப் பார்ப்பது போலே, ‘காமத்தீயால் கருகிப்போன ராவணன் நெஞ்சில் சிறிதளவாவது ஈரம் இருக்கிறதா? என்று ஆராய கருணையினால் மீண்டும் உபதேசம் செய்கிறான் விபீஷணன்.

செய்ய வேண்டிய முயற்சியைச் செய்யாமலிருப்பது அதர்மமாகும். அதனால்தான் கடைசிவரை முயற்சி செய்து பார்க்கிறான் விபீஷணன்.

அது பலிக்காமற் போகவே அனைத்தையும் துறந்துவிட்டு ராமனிடம் அடைக்கலம் புகச் செல்கிறான்.

‘தர்மத்திற்காக எதனையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் தர்மத்தைத் துறக்கலாகாது’ – இந்த உண்மையை அறிந்தவர்கள் விபீஷணனின் தர்மச் செயலைப் போற்றுவார்கள்; புரியாதவர்கள் தூற்றுவார்கள்.

விபீஷணன் ககன மார்க்கமாக வந்து கொண்டிருந்தபோது சுக்கிரீவன் முதலான வானரவீரர்கள் அவனைப் பார்த்துவிடுகிறார்கள். பிரதிகூலர் தொடர்பு விட்டவுடன் அனுகூலர்கடாட்சம் கிட்டிவிடுகிறது. பதிதர்களை விட்டு நீங்கியவுடனே பரம் பாகவத கடாட்சம் கிடைக்கப் பெறுகிறது.

தமபி சொல்லை மதியாத ராவணனை விட்டு, தம்பி சொல்லை மதிக்கும் ராமனை நாடி வருகிறான் விபீஷணன்.

“எல்லைஇல்  பெருங்குணத்த இராமன் தாள்இணை புல்லுதும், புல்லி, இப்பிறவி போக்குதும்” என்று கருதிய வண்ணம் காகுத்தனிடம் சரணாகதியடைய வருகிறான்.

ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. எனவே உறவுகளை எல்லாம் விட்டொழித்து ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு; அவன் தாங்களையே சரணமாகப் பற்றுகிறேன் என்கிறான்.

ஸோ ஹம் பருஷிதஸ் தேந
          தாஸவச்சாவமாநித: I
த்யாக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச
           ராகவம் சரணம் கத: II

“பற்றுக பற்றற்றான் பற்றினை
                      அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, பற்றுகளை விட்டால் இறைவனைப் பற்றலாம். இறைவனைப் பற்றினால் பற்றுகளை விடலாமல்லவா?

விபீஷணன் பற்றுகளை விட்டுப் பகவானைப் பற்ற வருகிறான்.

திரௌபதி பற்றுகளை விடும்வரை பரந்தாமன் அருள் செய்யவில்லைய எல்லாப் பற்றுக்களையும் விட்டுவிட்டுக் கண்ணனைச் சரண் புகுந்தாள். ‘கோவிந்தா!’ என்று கதறிக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டாள். திக்கற்ற நிலையிலே அவளுக்கு வேறோர் சொல்லும் சொல்லத் தோன்றவில்லை.

கண்ணீர் ஆறாகப் பெருகிச் சோர, துகில் பற்றியிருந்த கைகள் சோர, மெய் சோர, கோவிந்தா! கோவிந்தா! என்று வாய்விட்டு அலறினாள்.

ஆரா அமுதனின் திருநாமத்தை உச்சரித்த அளவிலே, அவள் நாவில் ஆரா அமுதம் ஊறியது. மெய் புளகாங்கிதமடைந்து உள்ளமெல்லாம் உருகிக் கரைந்தது.

இப்படி உருகிக் கரைந்த நிலையிலும் அணித்தே இருந்த துவாரகையிலிருந்து கண்ணன் நேரில் வந்து அருள் செய்யவில்லை.

அவன் திருநாமமாகிய கோவிந்தநாம சங்கீர்த்தனமே அவளுக்கு அபயமளித்து அவள் மானத்தைக் காத்தது.

கண்ணன் திருநாமம் துகில் வளர்க்கும் சித்துவேலை செய்தது.

இது போலவே இறகிழந்த சம்பாதிமுன், ராமநாமத்தைப் பஜித்த அளவிலே இறகுகள் வானளாவி வளர்ந்தனவாம்.

திரௌபதி கோவிந்தன் நாமத்தை உச்சரித்தாள். அவள் துகில் வளர்ந்து கொண்டே போயிற்று. சம்பாதி ராமன் நாமத்தை உச்சரிக்கவில்லை. சுற்றி நின்ற வானரர்கள்தாம் உச்சரித்தனர் சம்பாதிக்காக; பிறர் பஜித்த அளவிலே ராமநாமம் அவனுக்கு அருள் சுரந்தது.

கண்ணன் பரத்துவநிலையில் அதாவது தெய்வநிலையில் நின்று பக்தர்களைச் சோதித்துக் காப்பான்.

ராமனோ அவதாரநிலையில் அதாவது மனிதநிலையில் பக்தர்களைக் தேடிவந்து தானகவே கருணைபாலித்துக் காப்பான்.

காகுத்தன் கருணையைப் பெறுவதற்கு, சர்வசங்க பரித்தியாகம் அதாவது சகலத்தையும் துறப்பது வேண்டியதில்லை. அவன் எளியார்க்கு இன்னருள் புரியும் எளியவனான சௌலப்யசீலன்.

ஒரு முறை ராமா என்று அவன் திருநாமத்தைச் சொன்னால் போதும் உடனடியாக வந்து பேரருள் புரிவான்.

ஸ்கருதேவ ப்ரபந்நாய தவாஸ்மதி
                      ச யாசதே I
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி
                  ஏதத் வ்ரதம் மம II

ஒருவன் தன் தகுதியின்மையைச் சிந்திக்காமல் என்னை ஒரு முறை சரணம் பற்றினால் போதும்; அவனைச் சகல பூதங்களிடமிருந்தும் ரட்சிப் பேன். இது என் இலட்சியம் என்கிறான் ராகவன்.

என்னை வந்தடைந்து, ‘ஹே ராமா! இந்த ஆத்மா உன்னுடையது’ என்று ஒரு முறை சொன்னபோதிலும் அவனுக்கு அபயம் அளிப்பேன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. இது என் உறுதியான கொள்கை என்கிறான் ராமன்.

மற்ற எந்தக் கொள்கை மாறினாலும் இந்தக் கொள்கை மட்டும் மாறாது.

என்னைச் சரணம் பற்றிய சரணாகதன் என்னை விட்டு விலகப் பார்த்தாலும் நான் அவனை விடாமல் பற்றிக் கொள்வேன் என்கிறது இந்த ராம சரமசுலோகம். ஸர்வதர்மாந் பரித்யஜ்ய என்ற கீதா சரமசுலோகம் போன்று புகழ்ப் பெறுவது இந்த ஸ்ரீராமாயண சரமசுலோகம்.

இதன் மூலம் சரண்யன் சரணாகதனை நான் விடேன் என்ற உறுதிப்பாட்டை வெளியிடுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக