புதன், 24 ஏப்ரல், 2013

மற்றவர் மீதான மனக் கசப்பு அகன்று போக காத்திருங்கள்!


யார் மீதும் மனக்கசப்பு, வைராக்கியம், விரோதம் வைக்கக்கூடாது (யாக்.3:14). அப்படி ஏதாவது பாவம், இருதயத்தில் இருக்கும் பட்சதில் அவர்களுக்கு சொர்கத்தில் இடமில்லை. நடைமுறை வாழ்க்கையில் யாருடனும் உரசல் இல்லாமல் வாழ முடியாது. அலுவலகம், வெளியிடங்களில் மற்றவருடன் எதிர்பாராமல் சண்டை, வாக்குவாதம் வரக்கூடும். பிறவக்குணம் என்று கூறப்படும் ஜென்ம சுபாவங்கள் நீங்கப் பெற்றவனே இந்த சந்தர்ப்பங்களிலும் பாவம் செய்யாமல் தப்புவான்.

யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்படும் போது எதிராளி செய்யும் தவறுகளை மனதில் வைத்துக் கொள்கிறோம். அந்தத் தவறுகளை மன்னிக்காமல் இருப்பதால் அவருக்கு எதிரான கசப்பும், விரோதமும், வைராக்கியமும் ஏற்பட்டுவிடுகிறது. இது நாளடைவில் வளர்ந்து வளர்ந்து, அந்த நபரை முற்றிலும் வெறுக்கக் கூடிய நிலைக்கு கொண்டு செல்கிறது. அப்படிப்பட்ட இருதயத்தை இறைவன் விரும்பவில்லை. அவை நீக்கப்பட்டு, இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம் (எபே.4:31).

செத்த பிராணிகள் அகற்றப்படாமல் கிடந்தால், அந்த இடத்தை சுற்றி துர்நாற்றம் வீசும். பிணம் நாறுவது மட்டுமல்ல, அதை சுற்றி இருக்கும் இடத்தையும் அந்தப் பிணம் நாறச் செய்யும். அதுபோல் தான் இருதயத்திலும் இருக்கிற கெட்ட குணங்களும் அவனை அப்படியே செய்யும். யார் மீது பகை வைத்து இருக்கிறோமோ அவரைப் பற்றி வேறொருவருடன் பேசும் போது எரிச்சலான கெட்டவார்த்தைகள், கோபமான சிந்தனைகள் போன்ற நாற்றமெடுக்கும் தன்மைகள்தான் வெளிப்படும். அவரைப் பற்றி சிந்தனைசெய்யும்போதும் கெட்ட சிந்தனைகள் தான் நிழலிடும். இயேசுவுக்கு எதிராக எத்தனையோ பேர் செயல்பட்டபோதும் கூட, தனது இருதயத்தில் அவர்களைப் பற்றி இப்படிப்பட்ட தன்மையை ஓருநாளும் அவர் வைத்திருந்ததில்லை.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், அவர்கள் இருதயத்தில் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு கசப்பை ஏற்படுத்திவிடும் (கொலோ.3:19). இது காலகாலமாக அப்படியே இருந்து வைராக்கியமாக மாறிவிடும். இவர்களுள் ஒருவர் எதைச் செய்யதாலும் அது மற்றவருக்கு குற்றமாகவே தோன்றும். அதனால் எப்போதும் சண்டையும் சச்சரவுமே அந்த வீட்டில் நிலையாக இருந்துவிடும். பின்னர் பிரிவு வரை செல்ல வைத்துவிடும். மனக்கசப்பையும் அதன் தொடர்ச்சியாக சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்துவது சாத்தானின் செயலே. இதற்கு நீங்கலானவர் எவரும் இல்லை.

அப்படியானால் இந்தப் பாவத்துக்கு நீங்கலாக இருப்பது எப்படி? யாரைப் பற்றியாவது மனக்கசப்பு வரும்போது  அதை நாம் என்றைக்காவது இயேசுவிடம் கூறி இருக்கிறோமா? மற்றவர்களுக்குத் தெரியாத அந்தக்கசப்பை இறைவன் அறிவார். அவர் இருதயத்தைப் பார்க்கிறவர் என்பதால், அதை நாம் மறைக்க முடியாது. மற்றவர்கள் மீதான கசப்பை ஒரு பாவமாக நாம் எண்ணாமல், இறைவனிடம் அதைப்பற்றி கூறாமலேயே விட்டுவடுகிறோம். அதுவே மிகப் பெரிய சண்டைகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது.

எனவே நமது இருதயத்தை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. ஆனால், ‘கசப்பு ஏதும் இல்லை’ என்று நமது இருதயமே நம்மிடம் பொய் சொல்லக் கூடும். நம்மால் நம்மை முழுமையாக அறியமுடியாது. நமக்கு சரி என்று தோன்றும் விசயங்கள் நடைமுறையில் தவறாக நடக்கவும் வாய்ப்புவுள்ளது. எனவே கசப்பை நீக்குவதற்கு இறைவனிடம் முழுமனதோடு கேளுங்கள். உரியகாலத்தில் அதுநீக்கப்படும். அதன் பிறகே இருதயம் குணப்படும். கசப்பு நீங்கும்வரைக் காத்திருங்கள். இப்படி ஒவ்வொரு பாவத்தையும் இருதயத்தில் இருந்து நீக்கிவிட்டால் ஆன்மிக வாழ்வு வெற்றியாக அமையும். மனிதன் இந்த ‘பூ’ உலகத்திலேயே இறைவனின் அருள் பெற்றவனாக இருக்கலாம் அதுவே சந்தோஷம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக