புதன், 24 ஏப்ரல், 2013

உங்கள் செயல்கள் நன்மையில் முடிய வேண்டுமா...?

இரண்டு தணிநபர்கள் கோபம் கொள்ளும்போது  அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு அடித்துக்கொள்வார்கள். இரு சமுதாயத் தலைவர்கள் கோபம் கொண்டால் இரு சமுதாயமும் மோதிக்கொள்ளும். இருநாட்டுத்தலைவர்கள் கோபம் கொண்டால் அது போரில் கொண்டுபோய் முடியும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் கோபம் என்ற நெருப்பை தண்ணீர் என்ற பொறுமையின் மூலம் அணைக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தனி நபரில்லிருந்து தொடங்கி உலகம் முழுவதும் அமைதிப்பூங்காவாய் காட்சி அளிக்கும்.

இதைத்தான் திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. பொறுமையின் சிறப்பையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி பல இடங்களில் திருமறையில் வரும் சிறப்பு மிக்க அந்த வசனங்களில் சில...
நம்பிக்கை கொண்டாரே, பொறுமையை கைக்கொள்ளுங்கள். பொறுமையில் மற்றவரை மிகைத்து விடுங்கள். உறுதியாக நில்லுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். வெற்றி பெறுவீர்கள். (திருக்குர் ஆன் 3:200).

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (திருக்குர் ஆன்: 2:45).

ஒரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களை சேதப்படுத்தியும் உங்களை சோதிப்போம். பொறுமையை கைக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக. (திருக்குர்ஆன்: 2:15).

அச்சம், பசி, இறப்பு, இழப்பு ஆகியவை ஏற்படும் போது பதற்றம் வரும், பொறுமையின் மூலம் இதை தடுத்துவிட்டால், அதன் பிறகு நிறைய நன்மைகள் நம்மை வந்து சேரும். இதைத்தான் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு சொல்லிக்காட்டுகிறது.
நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே, உங்கள் இறைவனை அஞ்சுங்கள். இவ்வுளகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாவின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன்) கூறுவதை தெரிவிப்பீராக. (திருக்குர்ஆன்.39:10).

நம்பிக்கை கொண்டோரே பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (திருக்குர்ஆன்.2:153)

இவ்வாறு பொறுமையை வலியுறுத்தும் வசனங்கள் திருக்குர்ஆனில் நிரம்பிக்கிடக்கின்றன.

இறை நம்பிக்கையாளனுக்கு நடக்கும் எல்லா செயல்களும் நன்மையில்தான் முடிகின்றன. இந்த பாக்கியம் இறை நம்பிக்கையாளர்களுக்கு தவிர மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு இறை நம்பிக்கையாளன் மகிழ்ச்சி அடைந்தால் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அது  அவனுக்கு கூடுதல் நன்மையாகவும் ஆகிவிடுகிறது. ஒரு துன்பம் அவனை நெருங்கும்போது பொறுமையைக் கைக்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே மாறிவிடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக