திங்கள், 8 ஏப்ரல், 2013

தியானத்தில் தடைகள்.

தடைகள் இல்லாத வாழ்க்கைப் பாதை எதுவும் இல்லை.

தடைகளைத் தாண்டாமல் எவரும் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியாது.

“ஒரே தாவலில் யாரும் மேதைகள் ஆனதில்லை. பிறர் அயர்ந்து தூங்கும் ஆழ்ந்த இரவுகளில் உயிரைக் கொடுத்து உழைத்தால் மட்டுமே அவர்கள் அந்த உயர்ந்த நிலையை எட்ட முடிந்தது”. என்று ஆங்கிலக் கலைஞர் லாங்ஃபெலோ கூறியது ஆன்மீக வாழ்க்கையில் முற்றிலும் பொருத்தமானது.


உலகியல் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களும் பிரச்சனைகளும் பலரை ஆன்மிக வாழ்வில் ஈடுபடச் செய்கின்றன.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் எந்தத் தடையுமில்லாமல் உயர்ந்த அனுபூதியைப் பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இங்கேயும்கூட பூதங்கள் போல தடைகள் எழும்போது அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.

ஆன்மிக வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே தடைகளைத் தாண்டிச் சென்றுதான் அதைச் சாதித்தனர். புத்தர் போன்ற பெருமக்கள் கூட பல மன மயக்கங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் தந்திர சாதனைகளும் ஒருவேளை இந்த வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களை இந்திய ஆன்மிகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது.

அவை முறையே 1. ஆதிதைவிகம், 2. ஆதிபௌதிகம், 3. ஆத்யாத்மிகம் எனப்படும்.

1.    ஆதிதைவிகம்: தகாத சூழ்நிலை, திருப்தியில்லாத வேலை, எதிர்பாராத பிரச்சனைகள், மனக் கோளாறுகள் போன்ற காரணம் காணமுடியாத துன்பங்கள் போன்றவை ஆதிதைவிகம் என்பதில் அடங்கும்.
2.    ஆதிபௌதிகம்: பிற மனிதர்களோ அல்லது உயிரினங்களோ விளைவிக்கும் துன்பங்கள் ஆதிபௌதிகம் என்ற பிரிவில் அடங்கும்.
3.    ஆத்யாத்மிகம்: தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ளும்
துன்பங்கள்.
இந்த மூன்றுவகையான துன்பங்களில் முதல் இரண்டும் ஏறத்தாழ சாதகனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை, அதாவது அவனது வினைப்பயனால் விளைபவை.

ஆனால் தவறான மனோபாவங்களில் முதல் இரண்டும் ஏறத்தாழ சாதகனின் காட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை, அதாவது அவனது வினைப்பயனால் விளைபவை.

ஆனால் தவறான மனோபாவங்களாலும் தவறான செயல்களாலும் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆத்யாத்மிகம் ஒரு சாதகனின் கட்டுபாட்டிலேயே இருக்கிறது.

எனவே இந்த மூன்றாவது வகையை ஆத்மசாதகன் எச்சரிக்கையுடன் இருந்து தன் கட்டுப்பாட்டுக்குள் கவனமாக வைத்திருக்க வேண்டும்.

இது போன்ற அகத்தடைகள் நீங்கிவிடும்போது, புறத்தடைகள் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் வலிமையை இழந்து விடுகின்றன.

இந்த அகத்தடைகள் எவை?

இதற்குப் பதிலாக இந்தியாவின் ஒவ்வொரு சமய மரபும் தனக்கென்று ஒரு சொந்தப் பட்டியலை வைத்திருக்கிறது.

சாங்கிய காரிகை நூறு தடைகளைக் கூறுகிறது. இவை விபர்பயம் (தவறான அறிவு), அசக்தி (வலிமையின்மை), துஷ்டி (திருப்தி) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் படுகின்றன.

விபர்பயம் என்பது ஐந்து வகை. அவை அறியாமை, அகங்க்காரம், கவர்ச்சி, வெறுப்பு, வாழ்க்கையில் தீவிரப்பற்று எனப்படும். இவை மேலும் பிரிக்கப்படும்போது சாங்கியக் கருத்தின்படி விபர்பயம் அறுபத்திரண்டு வகைப்படுகிறது.

அசக்திகள் என்பவை இருபத்தெட்டு வகைப்படும். அவை எல்லாவற்றையும் பற்றி இங்கு நாம் தெரிநதுகொள்ள வேண்டியதில்லை. ஆனால் தனது பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒவ்வொரு சாதகனும் (மனிதன்) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் பொருள் தனது பலவீனங்களையே நினைத்து நினைத்து கலங்க வேண்டுமென்பதில்லை.

உடல் பலம் கொண்டவன், மன வலிமை பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதில்லை.

ஆன்ம வலிமை என்பது சாதாரண மன வலிமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
உண்மையான ஆன்மிக அனுபவம் பெறுவதற்கு இந்த ஆன்ம வலிமை இருக்க வேண்டும். இத்தகைய ஆன்ம வலிமையற்ற வர்கள் முதலில் தங்களிடம் ஆன்ம வலிமை இல்லை என்பதை உணர வேண்டும். வெறுமனே உணர்ந்திருந்தால் மட்டும் போதாது; எல்லையற்ற வலிமையின் ஊற்றாக விளங்கும் இறைவனிடம் ஆன்ம வலிமை தந்தருளும்படி கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

துஷ்டி என்பது சிறியச் சிறிய இன்பங்களில் திருப்தி அடைந்துவிடுவது. இங்கு நாம் குறிப்பிடுவது சாதாரணப் புலனின்பங்கலை அல்ல.

ஆன்மிக சாதகன் (மனிதன்) புலனின்ப நாட்டங்கள் களைக் கடந்தவனாக இருக்க வேண்டும்.

சாங்கிய காரிகை என்பது ஒன்பது விதமான துஷ்டிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அவற்றுள் ஒன்பது, ஆரம்ப கால ஆன்மிக முன்னேற்றத்திலும் மிக சிறிய ஆன்மிக அனுபவங்களிலும் திருப்தியடைந்து விடுதல். இதை ஆன்மிக வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகப் பலரிடம் நாம் பார்க்கலாம்.

பெரும்பாலான சாதகர்கள் ஆரம்பத்தில் சிலவருடங்கள் துடிப்புடன் கடினமான ஜபம், தியானம் போன்ற சாதனைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் சிறிது மனத்தூய்மையும், மன அமைதியும் பெற்ற உடனேயே அவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்; பிறகு அவர்களின் வேகம் தடைப் பட்டு நின்றுவிடுகிறது.

மற்றும் சிலர் வெறும் புத்தக ஞானத்துடன் நின்றுவிடுகிறார்கள்;  பல ஆன்மிக நூல்களைப் படிப்பதிலயே அவர்கள் திருப்தி காண்கிறார்கள்.

இன்னும் சிலரோ சில புற மாற்றங்களால் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்; கமண்டலம் வைத்துக் கொள்வது, காவி உடுப்பது, ஏராளமான ஆன்மிக நூல்களை வைத்துக்கொள்வது, அறையில் அழகிய பூஜை மேடை வைத்துக்கொள்வது, பிரசாதம் உட்கொள்வது போன்ற செயல்கள் பலருக்கு திருப்தி தந்துவிடுகிறது.

விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு ‘எதற்கும் ஒரு காலம் நேரம் வரவேண்டும்’ என்று தவறான நம்பிக்கையுடன் இருப்பதில் சிலர் திருப்தி பெற்று விடுகிறார்கள். உண்மைதான், ஆன்மிக முன்னேற்றம் காலத்தைப் பொறுத்துதான்; ஆன்மிக அனுபூதி என்பது எப்போது வரும், எந்த நேரத்தில் வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதற்காக, ‘எல்லாம் நேரப்படி நடக்கும், எதற்கும் அதிஷ்டம் வேண்டும்! என்றிருப்பது கோழைத்தனம்.

(பகவான், கீதை 4.38 –இல் ‘நாளடைவில் யோகத்தில் சித்தி பெறுகிறான் – காலேனாத்மனி விந்தி’ என்று சொல்லும் போது இத்தகைய கோழைத்தனத்தைக் குறிப்பிடவில்லை.)

இது போன்ற கோழைத்தனம் வாழ்வை எதிர்நோக்காமல் தப்பி ஓடுவது மட்டுமல்ல, இதனால் ஆன்மிக  முன்னேற்றமும் வெகுவாகத் தடைப்படுகிறது.

சாங்கிய காரிகை இன்னும் ஒருவிதமான திருப்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதாவது பக்குவமடைவதற்கு முன்பாகவே, தகுதி பெறுவதற்கும் முன்பாகவே செயல் புரிவதைத் துறந்து விடுவதால் பெறும் திருப்தியே அது.

புறத்துறவையும் பலவிதமான தவங்களையும் மேற்கொள்ளும்போது எதையோ சாதித்துவிட்ட எண்ணம் சாதகனுக்கு ஏற்படுகிறது. ‘ஆன்மிக வாழ்க்கை இவ்வளவுதான், இனி எதுவும் தேவையில்லை’ என்ற தவறான முடிவுக்குச் சிலர் வந்து விடுகிறார்கள்.


(உதாரணமாக ‘ஸந்யாஸ க்ரஹமாத்ரேண நாராயணோ பவேத் – வெறுமனே சந்நியசம் பெற்றுக் கொண்டால் போதும், மனிதன் இறைவனாகிவிடுகிறான்’ – இது போன்ற எண்ணம் ஆன்மிக முன்னேற்றத்தை உடனே தடுப்பது மட்டும் அல்ல, சாதகனைக் கிழேயும் தள்ளுகிறது.)

இத்தகைய கீழான திருப்திகளும் நிறைவுகளும் உண்மையான ஆன்மதாகத்தை நீர்க்கச் செய்துவிடுகின்றன;  உண்மையான ஆன்மதாகத்தின் தரத்தை மிகவும் தாழ்த்தி விடுகின்றன; பேரானந்தத்திற்கான, உயர்ந்த நிறைவுக்கான முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகின்றன. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் இதை ஒர் எளிய உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்குகிறார்.

‘வியாபாரிகள் கிடங்குகளில் மூட்டை மூட்டையாக நெல்லைக் குவித்து வைத்திருப்பார்கள்.  ஒவ்வொரு குவியலைச் சுற்றிலும் நெற்பொரியைத் தூவி விடுவார்கள். தானியங்களைத் தின்னவரும் எலிகள் இரவு முழுவதும் இந்தப் பொரியைத் தின்பதிலேயே திருப்தி அடைந்து தானிய மூட்டைகளின் பக்கமே போகாமல் சென்றுவிடுகின்றன; பத்துப்பங்கு பொரியை ஒரு பங்கு நெல் உண்டாக்கும் என்பதையே அவை மறந்துவிடுகின்றன.


“பெரிய தானியக் களஞ்சியங்களின் வழிக்கதவின் முன்னால் எலிகளைப் பிடிப்பதற்காகப் பொரி உருண்டை வைத்தப் பொறிகள் (கம்பியால் செய்யப்பட்ட எலி கூட்டுகள். அதற்குல் பொரி  உருண்டை) வைக்கப்பட்டிருக்கும். எலிகள் பொரி உருண்டையின் வாசனையை நுகர்ந்து களஞ்சியத்தின் அரிசையைத் தின்று களிக்கும் சுகம் அனுபவிப்பதில் ஈடுபடுவதை மறந்து. பொறியில் அகப்பட்டுச் சாகின்றன. ஆத்மாவின் விஷயமும் அதுபோலத்தான். அது தெய்விக ஆனந்தத்தின் வாசற்படியில் நிற்கிறது. அந்தத் திவ்யானந்தமோ கோடிக்கணக்கான விஷயானந்தம் என்ற உலகச் சுகங்கள் ஒன்றாகத் திரண்டன போன்றுள்ளது; என்றாலும் ஆத்மாவானது அந்தப் பேரின்பத்தை அனுபவிக்காமல் உலக விஷயங்கள் என்ற சிற்றின்பத்தில் வசப்பட்டு, மாயையாகிய வலையில் வீழ்ந்து, அதிலேயே இறந்தொழிகிறது.”

இத்தகையத் தடைகளைப் பற்றி பிற மதங்களைச் சேர்ந்த ஞானிகளும் கூறியிருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக