புதன், 10 ஏப்ரல், 2013

கடவுளைக் காட்டும் பாதை

பொதுவாக சமயத்தைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை.
சமூகத்தின் விதிகளுக்கிணங்க ஏதோ கோவிலுக்குச் செல்வதும், விரதங்களை அனுஷ்டிப்பதும், சடங்குகளைச் செய்வதும் ஆகிய இவையே சமயம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம்.

இவற்றைத் தவிர பல மூடப்பழக்க வழக்கங்களும் நம்மிடையே தோன்றி, சமயத்தின் ‘ஓர் அணிகலன்’ போலவும் அவை விளங்குகின்றன.

நமது சமயத்தைப் பற்றி ஒர் இடத்தில் சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறினார்.

“கோபுரம் போன்றது வானுயர்ந்து ஓங்கி வளர்ந்து, நிரந்தரமாக நிற்கும் சமயமே நமது இந்து மதம். அந்த ஆலயத்தை அடையத்தான் எத்தனை வழிகள்! அதில் எதைத் தான் நாம் பார்க்க முடியாது? நிர்க்குணமான எங்கும் வியாபித்திருக்கும் பரப்பிரம்மத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், சக்தி, விநாயகர், காளி போன்ற எத்தனை தெய்வங்கள்!..

“ஒரு சமயம் ஒரு கோவிலை நோக்கி பலர் சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆவல் மிகுதியால் உந்தப்பட்டு, நானும் அந்தக் கூட்டத்தினரோடு சேர்ந்து கொண்டு அந்த ஆலயத்திற்குள் சென்றேன்.

“ஆனால் அதற்குள் நான் பார்த்தது தான் என்ன? ஒருவரும்  இறைவனின் சந்நிதானத்திற்குப் போகவே இல்லை! சந்நிதானத்தின் வாயில் கதவுகளுக்கருகில் ஐம்பது தலைகள், நூறு கைகள், இரு நூறு வயிறுகள், ஐநூறு கால்கள் கொண்ட ஒரு பெரிய உருவச்சிலை இருந்தது. ஒவ்வொருவரும் சந்நிதானத்திற்குள் செல்லாமல் அந்தப் பெரிய உருவச்சிலையின். கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவ்விதம் விழுந்து உருண்டு கொண்டிருந்தவர்களில் ஒருவனிடம், நான் அவர்களின் அந்தச் செயலுக்கான காரணம் என்ன என்று விசாரித்தேன்.

“அதற்கு அவன், ‘உள்ளே, கர்ப்பகிரகத்திலுள்ள தெய்வத்திற்கு ஒரு வணக்கம் செலுத்தினாலோ, அல்லது சில பூக்களைப் போட்டாலோ போதுமானது. ஆனால் உண்மையான பூஜையை இதோ இங்கே வாயிலில் நிற்கும் இந்தத் தெய்வத்திற்குத்தான் போடவேண்டும்’ என்று பதில் கூறினான்.

“சரி, அப்படியானால் இந்தத் தெய்வத்தின் பெயர்தான் என்ன?” என்று நான் கேட்டேன்.

“அதற்கு அவன், ‘இது தான் புகழ் பெற்ற மூடநம்பிக்கை வழக்கம்’ என்ற பதிலை அளித்தான்.

‘இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களெள்லாம் சமயமல்ல’ என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் கூறிகிறார்.

அப்படியானால் சமயம் என்பது என்ன?

ஆன்மிக வழியில் ஆத்மஞானம் பெறுவதுதான் சமயம்.

இந்தக் கருத்தையே ஆதி சங்கரரூம், “ ஒருவன் கங்காசாகரத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளலாம், விரதங்களைக் கடைப்பிடிக்கலாம். தானா தர்மங்கள் செய்யலாம். ஆனால் உண்மையான ஞானம் பெறாமல் இவற்றின் மூலம் மட்டும் நூறு பிறவிகளானாலும் முக்தி பெற முடியாது” என்று கூறுகிறார்.

சுவாமி விவேகானந்தர் தர்ம சிறுவராக இருக்கும் போதே ஆத்தம ஞானம் பெற விரும்பினார்.

அதன் பொருட்டு அவர் சமயப்பற்று கொண்ட பலரிடம் சென்று.
“நீங்கள் இறைவனைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று வினவினார்.

ஆனால் ஒருவராலும் அவர் கேட்ட கேள்விக்கு, “ஆம், பார்த்திருக்கிறேன்” என்று உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருவர் மட்டுமே அவரிடம், “ஆம், நான் பார்த்திருக்கிறேன்.”  உன்னிடம் பேசுவது போல் இறைவனிடமும் பேசுகிறேன்” என்று தெளிவாகவும் தயங்கமாலும் பதில் கூறினார்.

நவீன விஞ்ஞானம் நேரான அனுபவம் இல்லாமல் எதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அது ஒவ்வொன்றிக்கும் தக்க நீருபணம் கேட்கிறது.

மேலும் சில விஞ்ஞானிகளோ இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதற்கு உரிய போதிய சாட்சியங்களை அவர்கள் பார்க்காததுதான். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கும் திட்டவட்டமான பதில் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து கிடைக்கிறது. அவர் நேராக இறையனுபூதியைப் பெற்றிருப்பதுதான் இந்த நவீன விஞ்ஞானிகளுக்குப் போதிய சாட்சியமும் நிரூபணமும்.

தமது ராஜயோக விரிவுரையில் சுவாமி விவேகானந்தர் சமயத்தைப் பற்றி பின்வறுமாறு விளக்குகின்றார்.-

“ஒவ்வொரு ஜீவன்மாவிலும் தெய்விகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்விகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான இலட்சியமாகும்.

‘இதைக் கர்மயோகம், கடவுள் வழிபாடு, மனக்கட்டுப்பாடு, தத்துவ விசாரம் என்னும் இவற்றில் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, எல்லாவற்றினாலோ செய்து சாதித்துச் சுதந்திரமாய் இரு.

“இதுவே சமயத்தின் மழு உண்மை ஆகும். சமய சித்தாந்தங்களோ, ஆகமக் கட்டுப்பாடுகளோ, சமயச் சடங்குகளோ, சாஸ்திரங்களோ, கோவில்களோ, இவை போன்ற மற்றவையோ, இதற்கு உதவி புரியும் இரண்டாம் தரமான முக்கியதத்துவமுடைய சாதனங்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன.”

ஆகையால் சுவாமிஜி கூறியதுபோல் சடங்குகள், கொள்ளைகள் போன்றவை மிகவும் முக்கியமானவையல்ல.

நமக்குள் மறைந்திருக்கும் தெய்விகத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். அதன் மூலம் விடடுதலையடைவதே – முக்தி பெறுவதே – நமது இலட்சியமாக அமையட்டும்.

விடுதலை? எதிலிருந்து விடுதலை? நமது பந்தங்களிலிருந்து விடுதலை.

அப்படியானால் இந்த பந்தம் என்பதுதான் என்ன?

இறைவனை நமது கண்களிலிருந்து மறைக்கும் நம்மிடமுள்ள அறியாமையே பந்தம் எனப்படும்.

உண்மையான ஞானம் – அறியாமையால் (அஞ்ஞானத்தால்) – மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறியாமை காரணமாகத்தான் மனிதன் மாயை என்ற வலையில் சிக்கியிருக்கிறான்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள் போன்ற எல்லாவற்றுக்கும் நம்து அறியாமையே காரணம்.

உண்மையில்  நாம் தெய்வாம்சம் பொருந்தியவர்களே!

சுதந்திரமானவர்களே! இந்த உண்மை நமது அஞ்ஞானத்தால் நம்மிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கிறது.

எப்போது நமது அறியாமை – ஞானம் என்ற அக்கினியில்  - எரிந்து சாம்பலாகிறதோ, அப்போத நாம் விடுதலை பெற்று விடுகிறோம்.

“உண்மை ஒன்றே. ஞானிகள் அதைப் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.”

எல்லா மதங்களும் உண்மையானவையே! அவை அனைத்தும் ஒரே லட்சியத்தை நோக்கித்தான் செல்கின்றன.

இந்த உண்மையை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அனுபவபூர்வமாகக் கண்டார்; காட்டினார்; நிலை நிறுத்தியும் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக