புதன், 10 ஏப்ரல், 2013

கடவுளைக் காட்டும் பாதை

பொதுவாக சமயத்தைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை.
சமூகத்தின் விதிகளுக்கிணங்க ஏதோ கோவிலுக்குச் செல்வதும், விரதங்களை அனுஷ்டிப்பதும், சடங்குகளைச் செய்வதும் ஆகிய இவையே சமயம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம்.

இவற்றைத் தவிர பல மூடப்பழக்க வழக்கங்களும் நம்மிடையே தோன்றி, சமயத்தின் ‘ஓர் அணிகலன்’ போலவும் அவை விளங்குகின்றன.

நமது சமயத்தைப் பற்றி ஒர் இடத்தில் சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறினார்.

“கோபுரம் போன்றது வானுயர்ந்து ஓங்கி வளர்ந்து, நிரந்தரமாக நிற்கும் சமயமே நமது இந்து மதம். அந்த ஆலயத்தை அடையத்தான் எத்தனை வழிகள்! அதில் எதைத் தான் நாம் பார்க்க முடியாது? நிர்க்குணமான எங்கும் வியாபித்திருக்கும் பரப்பிரம்மத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், சக்தி, விநாயகர், காளி போன்ற எத்தனை தெய்வங்கள்!..

“ஒரு சமயம் ஒரு கோவிலை நோக்கி பலர் சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆவல் மிகுதியால் உந்தப்பட்டு, நானும் அந்தக் கூட்டத்தினரோடு சேர்ந்து கொண்டு அந்த ஆலயத்திற்குள் சென்றேன்.

“ஆனால் அதற்குள் நான் பார்த்தது தான் என்ன? ஒருவரும்  இறைவனின் சந்நிதானத்திற்குப் போகவே இல்லை! சந்நிதானத்தின் வாயில் கதவுகளுக்கருகில் ஐம்பது தலைகள், நூறு கைகள், இரு நூறு வயிறுகள், ஐநூறு கால்கள் கொண்ட ஒரு பெரிய உருவச்சிலை இருந்தது. ஒவ்வொருவரும் சந்நிதானத்திற்குள் செல்லாமல் அந்தப் பெரிய உருவச்சிலையின். கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவ்விதம் விழுந்து உருண்டு கொண்டிருந்தவர்களில் ஒருவனிடம், நான் அவர்களின் அந்தச் செயலுக்கான காரணம் என்ன என்று விசாரித்தேன்.

“அதற்கு அவன், ‘உள்ளே, கர்ப்பகிரகத்திலுள்ள தெய்வத்திற்கு ஒரு வணக்கம் செலுத்தினாலோ, அல்லது சில பூக்களைப் போட்டாலோ போதுமானது. ஆனால் உண்மையான பூஜையை இதோ இங்கே வாயிலில் நிற்கும் இந்தத் தெய்வத்திற்குத்தான் போடவேண்டும்’ என்று பதில் கூறினான்.

“சரி, அப்படியானால் இந்தத் தெய்வத்தின் பெயர்தான் என்ன?” என்று நான் கேட்டேன்.

“அதற்கு அவன், ‘இது தான் புகழ் பெற்ற மூடநம்பிக்கை வழக்கம்’ என்ற பதிலை அளித்தான்.

‘இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களெள்லாம் சமயமல்ல’ என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் கூறிகிறார்.

அப்படியானால் சமயம் என்பது என்ன?

ஆன்மிக வழியில் ஆத்மஞானம் பெறுவதுதான் சமயம்.

இந்தக் கருத்தையே ஆதி சங்கரரூம், “ ஒருவன் கங்காசாகரத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளலாம், விரதங்களைக் கடைப்பிடிக்கலாம். தானா தர்மங்கள் செய்யலாம். ஆனால் உண்மையான ஞானம் பெறாமல் இவற்றின் மூலம் மட்டும் நூறு பிறவிகளானாலும் முக்தி பெற முடியாது” என்று கூறுகிறார்.

சுவாமி விவேகானந்தர் தர்ம சிறுவராக இருக்கும் போதே ஆத்தம ஞானம் பெற விரும்பினார்.

அதன் பொருட்டு அவர் சமயப்பற்று கொண்ட பலரிடம் சென்று.
“நீங்கள் இறைவனைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று வினவினார்.

ஆனால் ஒருவராலும் அவர் கேட்ட கேள்விக்கு, “ஆம், பார்த்திருக்கிறேன்” என்று உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருவர் மட்டுமே அவரிடம், “ஆம், நான் பார்த்திருக்கிறேன்.”  உன்னிடம் பேசுவது போல் இறைவனிடமும் பேசுகிறேன்” என்று தெளிவாகவும் தயங்கமாலும் பதில் கூறினார்.

நவீன விஞ்ஞானம் நேரான அனுபவம் இல்லாமல் எதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அது ஒவ்வொன்றிக்கும் தக்க நீருபணம் கேட்கிறது.

மேலும் சில விஞ்ஞானிகளோ இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதற்கு உரிய போதிய சாட்சியங்களை அவர்கள் பார்க்காததுதான். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கும் திட்டவட்டமான பதில் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து கிடைக்கிறது. அவர் நேராக இறையனுபூதியைப் பெற்றிருப்பதுதான் இந்த நவீன விஞ்ஞானிகளுக்குப் போதிய சாட்சியமும் நிரூபணமும்.

தமது ராஜயோக விரிவுரையில் சுவாமி விவேகானந்தர் சமயத்தைப் பற்றி பின்வறுமாறு விளக்குகின்றார்.-

“ஒவ்வொரு ஜீவன்மாவிலும் தெய்விகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்விகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான இலட்சியமாகும்.

‘இதைக் கர்மயோகம், கடவுள் வழிபாடு, மனக்கட்டுப்பாடு, தத்துவ விசாரம் என்னும் இவற்றில் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, எல்லாவற்றினாலோ செய்து சாதித்துச் சுதந்திரமாய் இரு.

“இதுவே சமயத்தின் மழு உண்மை ஆகும். சமய சித்தாந்தங்களோ, ஆகமக் கட்டுப்பாடுகளோ, சமயச் சடங்குகளோ, சாஸ்திரங்களோ, கோவில்களோ, இவை போன்ற மற்றவையோ, இதற்கு உதவி புரியும் இரண்டாம் தரமான முக்கியதத்துவமுடைய சாதனங்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன.”

ஆகையால் சுவாமிஜி கூறியதுபோல் சடங்குகள், கொள்ளைகள் போன்றவை மிகவும் முக்கியமானவையல்ல.

நமக்குள் மறைந்திருக்கும் தெய்விகத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். அதன் மூலம் விடடுதலையடைவதே – முக்தி பெறுவதே – நமது இலட்சியமாக அமையட்டும்.

விடுதலை? எதிலிருந்து விடுதலை? நமது பந்தங்களிலிருந்து விடுதலை.

அப்படியானால் இந்த பந்தம் என்பதுதான் என்ன?

இறைவனை நமது கண்களிலிருந்து மறைக்கும் நம்மிடமுள்ள அறியாமையே பந்தம் எனப்படும்.

உண்மையான ஞானம் – அறியாமையால் (அஞ்ஞானத்தால்) – மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறியாமை காரணமாகத்தான் மனிதன் மாயை என்ற வலையில் சிக்கியிருக்கிறான்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள் போன்ற எல்லாவற்றுக்கும் நம்து அறியாமையே காரணம்.

உண்மையில்  நாம் தெய்வாம்சம் பொருந்தியவர்களே!

சுதந்திரமானவர்களே! இந்த உண்மை நமது அஞ்ஞானத்தால் நம்மிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கிறது.

எப்போது நமது அறியாமை – ஞானம் என்ற அக்கினியில்  - எரிந்து சாம்பலாகிறதோ, அப்போத நாம் விடுதலை பெற்று விடுகிறோம்.

“உண்மை ஒன்றே. ஞானிகள் அதைப் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.”

எல்லா மதங்களும் உண்மையானவையே! அவை அனைத்தும் ஒரே லட்சியத்தை நோக்கித்தான் செல்கின்றன.

இந்த உண்மையை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அனுபவபூர்வமாகக் கண்டார்; காட்டினார்; நிலை நிறுத்தியும் இருக்கிறார்.

தவற்றைத் திருத்திக் கொள்ளும் மனோபாவம்

 செய்வது தவறு!” என்று நாம் செய்த தவற்றைப் பிறர் சுட்டிக்காட்டும் போது, அது நம் தன்மானத்தில் இடிக்கிறது. எனவே நாம் வெட்கப்படுகிறோம்; கோபப்படுகிறோம்.

“அது தவறில்லை. நாம் செய்தது சரி” என்பதற்கு ஆயிரம் சமாதானம் – நொண்டிச் சாக்கு காணபதில் இறங்குகிறோம்.

தவற்றைத் தவறு என்று ஏற்றுக்கொள்வதற்கு அசாத்திய துணிவு வேண்டும்; பெருந்தன்மை வேண்டும்.

ஒரு விஷயம் தவறு என்று உணரும்போது சரியான வழியைக் காண நம் மனம் முயல்கிறது.

தவறு என்று உணராதபோது அல்லது உணர மறுக்கும்போது – நாம் செய்த தவறுக்கு நொண்டிச் சமாதானம் சொல்லும்போது – மனதிற்கு சரியான வழியைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இது காரணமாகக் தவறுகளைக்கூட “சரியானவை” என்று மாறுபட்டுச் சிந்திக்க மனம் பழகுகிறது. மனம் இதனால் குழப்ப மடைகிறது.

டாக்டர் மேக்ஸ்வெல் மாட்ஸ் என்ற மனவியல் அறிஞர் கூறுகிறார்:

“லட்சியம் வழிகாட்ட மனம் நடக்கிறது; தவறு நேரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் சரியான பாதைக்கு வருகின்ற – தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் ஒரு மகத்தான சாதனம்தான் மனம்” என்கிறார் அவர்.

தவறு செய்யாதவர்கள் உலகில் இல்லை.

“தவறிழைப்பது மனித இயல்பு” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி.

தவறிலிருந்து மீள்வதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை.

நாம் செய்யும் தவற்றைக் கூட ‘சரி’ என்று வாதிட முன்வருவது எது? நம் ஆணவம்தான்.

இந்த ஆணவம் – அகங்காரம் – உண்மை நிலவரத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியாத படி நம் கண்ணை மறைக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஜேம்ஸ் ஆலன், “நல்ல முயற்சியினாலும் திறமையினாலும் அடைந்த வெற்றி நிரந்தரமாக இருக்க வேண்டுமானால், அந்த வெற்றி சதா சர்வ நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

“ஆகா! நான் உச்சிக்கு வந்துவிட்டேன். இனியாரும் என்னை அசைக்க முடியாது!” என்று ஆணவத்துடன் அலட்சியப் போக்கைக் கைக்கொள்ளும் தலைவனும் சரி, “எனது நிறுவனம் இந்த ஆண்டு இவ்வளவு லாபத்தை ஈட்டியிருக்கிறது. எங்களை முதலிடத்திலிருந்து யாரும் அசைக்க முடியாது” என்று நினைக்கும் ஒரு நிறுவனத் தலைவனும் சரி – வெகு விரைவில் போட்டியாளரால்  தோற்கடிக்கப் படுவார்கள்.

‘நான் நேற்றுவரை நல்லவனாயிருந்தேன்’ என்பது எடுபடாது. தொடர்ந்து நல்லவராக இருக்கிறோமா என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது; உண்மை இருக்கிறது.

மனிதன் தன்னைத்தானே கண்காணித்துக் கொண்டிருந்தால்தான் முன்னேற முடியும்.

மனிதன் தன்னைத்தானே தவறு கண்ட விடத்து திருத்திக்கொள்ள முன்வந்தால்தான் முன்னேற முடியும்.

வாட்டர்கேட் ஊழலில் குற்றம் நிரூபிக்கப் பட்டபோதிலும், “நான் குற்றவாளியல்ல” என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிச்சன் கடைசியில் பதவி இறங்கி அவமானப் பட நேர்ந்தது. குற்றத்தை அவர் முன்பே ஒப்புக்கொண்டிருந்தால், சட்டமன்றம் அவரை மன்னித்திருக்கக் கூடும்.

“கிழே விழுவது தவறல்ல; மீண்டும் எழுந்து நிற்காததுதான் குறை” என்றார் ஓர் அறிஞர்.

அதேபோல, தெரியாமல் தவறு செய்வது பெரும் பாவமல்ல, தவறு என்று தெரிந்த பிறகும் சரியான வழியில் நடக்கத் தவறுவது தான் பெரும் குறை.

வாழ்க்கை என்பது ஒரு பாடம். தொடர்ந்து அனுபவங்கள் வாழ்க்கையில் நமக்குப் படிப்பினைகளைத் தருகின்றன. அதில் மனம் உண்மையையும் பொய்யையும் பிரித்துப் பார்க்ககவும், மீண்டும் சரியான வழியில் நடந்து செல்லவும் முயல வேண்டும்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த முயற்சி; தொடர்ந்த போராட்டம். வாழ்வு ஒரு தொடர்க் கல்வி.

“இந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வெற்றியாளர்களை ஆராய்ந்தோமானால் யாருமே நூறு சதவிதம் சரியான முடிவெடுத்தவர்களாக இருந்ததில்லை; தவறே செய்யாமல் பூரணத்வம் பெற்ற மனிதர்களாக யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அவ்வப்போது இருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து நம் அனுபவத்திற்கேற்ப, நமது மனச்சாட்சிக்கேற்ப ஒரு முடிவுக்கு வருகிறோம். அது பின்னால் தவறாகப் போகலாம். ஆனால் முடிவெடுத்த சமயத்தில் நியாயமான காரியத்தைச் செய்தோமா என்பதுதான் கேள்வி.

“வெற்றிகளிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் படிக்க முடியாது; தவறிலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ள முடியும்” என்கிறார்கள் அறிஞர்கள்.

நேரான பாதை என்ற முக்கிய தடத்திலிருந்து தவறுகள் நம்மை வேறு தடங்களில் இறக்கி விடுகின்றன. அதை உணர்ந்தவுடன் நாம் நமது வழியைத் திருப்பி, மீண்டும் போக வேண்டிய சரியான முக்கிய தடத்திற்கு வந்து சேருகிறோம்.

ஆத்மா முன்னேற வாய்ப்பளிக்கப்பட்ட இடம். அதை உணர்ந்து வாழ்கிறோமா என்பதைத்தான் அடிக்கடி சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.

“தவறுகளாகவே என் வாழ்க்கை அமைந் திருக்கிறதே!” என்று புலம்பத் தேவையில்லை. சிலருக்கு தவறுகளிலிருந்து மீள்வதற்கு அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது. சிலர் ஓரிரு தவறுகளிலேயே உண்மைகளைப் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.

“தவறுகளை வாழ்த்துங்கள்; கெட்ட சூழ்நிலை தோன்றினால் அது மாறிவிடும் என்று ஆசி கூறி நம்பிக்கைத் தெரிவியுங்கள்.”

“முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாகவே நீ நினைத்தாலும் அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். நீ அப்படிப் பட்ட தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று நம்புகிறாயா? எனவே நீ செய்த தவறுகளை வாழ்த்து. அந்தத் தவறுகள் உன்னை அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!”


குருநானக் அருள்வாக்கு

1.    இறைவனின் சங்கல்பமே உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அருடைய சங்கல்பம் ‘இவ்வளவுதான்’ என்று வர்ணிக்கும் சொற்களில் அடங்காமல் கடந்து விளங்கிறது.

தெய்வ சங்கல்பத்தின் மூலமாகவே மகிமை கிடைக்கிறது.
அவருடைய சங்கல்பத்தினால் சிலர் உயர்ந்த வர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும் பிறக்கிறார்கள்.
2.    இறைவனின் சங்கல்பப்படியே மக்கள் சுகங்களையும்
துக்கங்களையும் அடைகிறார்கள்.

இறைவன் சங்கல்பத்தினாலே தூய பக்தர்கள் முக்தியும் பெறுகிறார்கள்.
 
3.    பக்தி இல்லாதவர்கள், இறைவன் சங்கல்பத்தின்படி
முடிவற்ற (சம்சாரம் என்ற) பிறவிக்கடலில் சிக்கித் தத்தளிக்கிறார்கள்.

4.    சிலர் இறைவனின் மகிமையைப் பாடுகிறார்கள். அதுவும்
அவர் வழங்கும் ஆற்றலுக்கு ஏற்பவே அமைகிறது; அவர் வழங்கும் செல்வங்களை அவருடைய அருளுக்குச் சாட்சியெனக் கொண்டு சிலர் பாடுகிறார்கள்; வேறு சிலர் எவராலும் அறிய முடியாதவன் இறைவன் என்று பாடுகிறார்கள்.

5.    மண்ணை உயிராக்கி, பிரகு உயிரை மறுபடியும்
மண்ணாக்குகிறார் அவரே என்று சிலர் பாடுகிறார்கள்;
படைப்பவரும் அவரே; அழிப்பவரும் அவரே; உயிரைக் கொடுப்பவரும் அவரே: பறிப்பவரும் அவரே.

6.    ஒரே சமயத்தில் நமக்கு மிகவும் அருகில் 
  இருப்பவராகவும், மிகவும் தொலைவில் இருப்பவராகவும்
  அவர் விளங்குகிறார் என்று சிலர் பாடுகிறார்கள்.
 
  அவரை வர்ணிப்பதற்கு எல்லையே இல்லை.
 
       எண்ணற்றவர்கள் அவரை வர்ணிக்க முயற்சி   செய்திருக்கிறார்கள். எனினும் அவர் வர்ணனைக்கு அப்பாற்பட்ட ஒருவராகவே விளங்குகிறார்.

இறைவனின் திருவருளைப் பெற்றவர்கள் களைப்படையக் கூடும். ஆனால் அவர் களைப்பே இல்லாதவர்,

காலம் காலமாக அவர் அருளினால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். அவருடைய சங்கல்பத்தினால்தான் உலகம் இயங்குகிறது. இருந்தாலும் யாருடைய தயவும் கவனிப்பும் தேவைப்படாதவர் அவர்.

7.    இறைவன் சக்தியம், அவருடைய புனிதச் சொல்லும் 
சத்தியமானது. அவருடைய அன்புக்கு எல்லையே கிடையாது.
8.    செல்வம் தருமாறு மனிதர்கள் இறைவனிடம்
பிரார்த்தனை செய்கிறார்கள். அவரும் அவர்கள் கேட்கும் எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கியபடியே இருக்கிறார்.

எல்லாமே அவருடையதாக இருக்கும்போது அவரது பாதகமலங்களில் நாம் என்ன காணிக்கை செலுத்த முடியும்? என்ன சொல்லி அவருடைய அன்பைப் பெறமுடியும்?

9.    விடியற்காலை நேரங்களில் ஜபம், தியானம்
ஆகியவற்றின் மூலம் இறைவனுடன் ஒன்றுபடு.

ஒழுக்கம்

1. முன் காலத்தில் பிறர் மனைவியை இச்சித்தவன் ஒருவன்தான் இருந்தான் அவனுக்காக எழுதப்பட்டது ராமாயணம்.

முன்காலத்தில் பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டவன் ஒருவன் தான் இருந்தான். அனுக்காக எழுதியது பாரதம்.

இப்பொழுது எழுத ஆரம்பித்தால் ராமாயண – மகாபாரதங்கள் மலையாகக் குவியும்.

2. ஆயிரம் வருடம் யாரையும் கடிக்காத நாகம் தலையில் மாணிக்கம் இருக்கும்.

மனிதனும் பிரம்மசரிய விரதத்தைக் காத்தால் அபாரமான ஆத்மசக்தி வளரும்.

3. உடம்பால் வேலை செய்பவனை வட மூளையால் வேலை செய்பவனுக்குத் தான் அலுப்பு அதிகம்.

நிழலில் இருப்பவனுக்குக் கஷ்டமில்லை என்று நினைக்கக் கூடாது.

3. பிறர் உங்களைப் புகழ வேண்டுமானால் நீங்கள் பிறரைப் புகழுங்கள்.
நீ பிறரைக் குறை கூறினால், பிறர் உன்னைக் குறை கூறுவார்கள்.

4. காந்தியடிகள்  37-ஆவது வயதில் இல்வாழ்க்கையில் கசப்படைந்து மக்களுக்குச் சேவை செய்யத் தலைப்பட்டார்.
நமக்கு வயது 70 ஆனாலும் கூட வாழ்க்கையில் கசப்புத் தட்டுவதில்லை; உலக ஆசைகள் விடுவதில்லை.

5. நமக்கு ஆகாத மலர்களையெல்லாம் பரமசிவன் ஏற்றுக் கொண்டார்.
ஆகவே, செல்லாத காசும் அவர் உண்டியில் போடுவோம் என்று நினைப்பது தவறு.

6. கையில் பெருவிரல் தனியே நிற்கிறது. மற்ற விரல்கள் சேர்ந்து இருக்கிறது.
அது போல் பெரிய மனிதன் எப்போதும் ஒதுங்கியே வாழ்வான்.
சில்லரைகள் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும்.

7. பாண்டவர்கள் ஐந்து பேர்; துரியோதனாதிகள் நூறு பேர்; முன் காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேர்களும், தீவயவர்கள் நூறு பேர்களும் இருந்திருக்கிறார்கள்,

இப்போது கேட்க வேண்டுமா?

8. நன்மைக்குப் பாதை போகப் போக விரியும்.
தீமைக்குப் பாதை போகப் போகப் சுருங்கும்.

9. ஆட்டுப்பாலில் பிழுக்கை விழுந்தால் பிழுக்கையை எடுத்து  எறிந்துவிட்டுப் பாலை உபயோகிக்கிறோம்.

அதுபோல் மனிதனிடம் உள்ள குற்றத்தைப் பற்றிப் பேசாமல் குணத்தைப் பற்றியே பேச வேண்டும்.

10. பொய்மையாக வாழக் கூடாது.
பொய்மை பேசக் கூடாது.

வாழ்வு சிறக்க வேண்டுமானால் பொய்யை விட்டுவட வேண்டும்.
பொய்யா விளக்கே இருளகற்றி ஒளி காட்டும்.

அறங்களுக்கெல்லாம் தலையாயது பொய்யாமை.

ஆக பொய் பேசாதே.
சத்தியமே நித்தியம்.



கபீர்தாசின் அருள்வாக்கு

உன்மையைப் போன்ற தவம் இல்லை. பொய்யைப் போன்ற பாவம் இல்லை.
யாருடைய இதயத்தில் சக்தியம் இருக்கிறதோ அந்த இதயத்தில் குரு தானே இருக்கிறார்.

கடலின் அலைகள் எவ்வளவோ மனதின் அலையும் அவ்வளவே.
 (மனம்) ஒரு நிலையில் இருக்குமானால் எளிதாகவே வைரம் (கடவுள் தன்மை) உற்பத்தியாகிவிடும்.

செல்வத்தை எல்லோரும், விரும்பி வழிபடுகிறார்கள். செல்வத்தின் தலைவனை ஒருவரும் வழிபடுவதில்லை.
கடவுளை வழிபடு. எல்லா நன்மைகளும் உனக்கு அடிமையாகிவிடும்.

தூங்கி இரவை இழந்தாகிவிட்டது.
சாப்பிட்டுப் பகலும் போயிற்று.
பிறவி விலை மதிப்பற்ற வைரமாக இருந்தது. அதை இப்படி சல்லிக்காசுக்கு மாற்றியாகிவிட்டது.

ஆண்டவனால்தான் எல்லாம் நடக்கிறது. மனிதனால் ஒன்றும் இல்லை.
அவர் கடுகிலிருந்து மலையை ஆக்குவார். மலையைக் கடுகாகவும் ஆக்குவார்.

சிரித்துச் சிரித்து யாரும் கடவுளை அடைந்ததில்லை.
கடவுளை அடைந்தவன் அழுது அழுதே அவரை அடைந்தான்.
சந்தோஷமாக இருந்தே கடவுளை அடைந்துவிடலாம் என்றிருந்தால் யார் தான் அவரை அடையாமல் இருப்பார்கள்.

வாய் பேச்சை நிறுத்தி (ஆத்ம சாதனை என்ற) செய்கையில் மனதைச் செலுத்து.
நீர் குடிக்காமல் மனிதன் தாகம் போகாது.

தண்ணீரில் போகிறவனைப் போக விடாதே. கையைப் படித்துக் கரைக்கு இழு.
சொன்னதைக் கேட்காத போதிலும் இன்னும் இரண்டு தடவைச் சொல்லிப்பார்.

குரு, கோவிந்தன், இருவரும் நிற்கிறார்கள். முதலில் யார் காலில் விழுவேன்? குருநாதன் போற்றத் தகுந்தவர்.
(முதலில் குருவைத்தான் வணங்குவேன்.)
ஏனென்றால், அவர்தானே கோவிந்தனை எனக்கு காட்டிக் கொடுத்தார்.

உன் மனம் குளிர்ந்திருந்தால் உலகத்தில் உனக்கு எதிரி ஒருவருமில்லை.
இந்தத் ‘தான்’ என்கிற கர்வத்தைவிடு. எல்லோரும் உன்னிடம் அன்பு கொள்வார்கள்.

பிள்ளைப் பருவம், இளமை, கிழத்தனம் எல்லாம் கழிந்துவிட்டது. நான்காம் பருவம் வந்துவிட்டது.
எலியைப் பூனை நோக்கியிருப்பது போல் யமன் நோக்கியிருக்கிறான்.

உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்துகொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்துகொள்வதில்லை. மனதால் யோகியானால் எளிதாகவே எல்லாவற்றையும் அடையலாம்.

ஆடலாம், பாடலாம் ( தேவாரம் – திருவாசகம் போன்ற ) பாடல்களை ஓதலாம். ஆனால் குருவிடம் பக்தி இல்லை. கபீ்ர் சொல்கிறார்: விதை இல்லாமல் வயலில் எப்படி விளைவு ஏற்படும்? ( குரு அன்பு விதை)

இறை நம்பிக்கை.

காசி ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் காசி விஸ்வ நாதன், இறைவி காசி விசாலாட்சி. ஒரு நாள் அவர்கள் இருவரும் அமர்ந்து ஆன்மிக விஷயங்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காசி விஸ்வநாதர், “இந்த மனிதர்களை நாம் மிகவும் நம்பிக்கையுடன்தான் படைத்திருக்கிறோம். இருந்தாலும் அவர்களுக்குத் தான் போதிய நம்பிக்கை இல்லை. எதிலும் ஒர் உண்மையான நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!” என்றார்.

அதைக் கேட்டதும் ஜமன்மாதா வாகிய விசாலாட்சி, “என்ன அப்படி சொல்கிறீர்கள்? அதோ பாருங்கள்... எவ்வளவு பேர் காசியைத் தேடி வந்து கங்கையில் நீராடிக் கொண்டிருக் கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் காசியைத் தேடிக்கொண்டு இங்கே வருவார்களா?” என்று வினவினாள்.

“சரி, அதைச் சோதித்துப் பார்க்கலாம்” என்று இருவரும் முடிவு செய்தார்கள்.

உடனே ஒரு திட்டம் போட்டார்கள்.

அந்த திட்டம் இதுதான்:
      “நாம் இருவரும் பக்தர்கள் போன்று உருவத்தை மாற்றிக் கொண்டு கங்கைக் கரைக்குப் போகலாம். நான் கங்கையில் இறங்கி குளிக்கிறேன். சிறிது நேரத்தில் நீர் சுழலில் மாட்டிக்கொண்டதுபோல் நான் நடிக்கிறேன். நீ உடனே கரையிலிருந்து சத்தம் போடு... ‘என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்!’ என்று கூச்சல் போடு... அதோடு இன்னொன்றும் சொல்: ‘யாராவது ஒரு புண்ணியாத்மா என் கணவரிடம் சென்று அவரது முடியைப் பிடித்துத் தூக்க வேண்டும். அப்படி ஒரு சாபம் எங்களுக்கு இருக்கிறது. புண்ணியாத்மா... அதாவது, எந்தப் பாவமும் இல்லாத ஒருவர்தான் அவரைக் காப்பாற்ற முடியும்!
அப்படிப்பட்டவர்கள் யாராவது வெள்ளத்தில் குதித்து என் கணவரைச் சீக்கிரம் காப்பாற்றுங்கள்!’ என்று சொல்லிக் கூச்சல் போடு... பிறகு என்ன நடக்கிறது பார்க்கலாம்!’ என்றார் கடவுள்,

அவ்விதம் ஜகன்மாதாவும் ஜகத்பிதாவும் சாதாரண பக்தர்கள் உருவத்தில் கங்கைக் கரைக்கு வந்தார்கள்.

இறைவன் கங்கையில் இறங்கிகுளிக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் திட்டம் போட்டது போலவே சுழலில் மாட்டிக் கொண்டவர் போல் கத்தினார்.

கரையில் இருந்த விசாலாட்சி தேவி, “ஐயோ, என் கணவரைக் காப்பாற்றுங்களேன்!” என்று அலறினாள்.

பல பேர் ஓடிவந்தார்கள்.

உடனே இறைவி, “பாவம் இல்லாத புண்ணியாத்மா ஒருவரால் தான் என் கணவர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதனால் புண்ணியாத்மா யாராவது அவரிடம் போய் அவரது முடியைப் பிடித்துத் தூக்கினால் அவரைக் காப்பாற்றிவிடலாம்!” என்று தெரிவித்தாள்.

ஜகன்மாதா இப்படி கூறியதும் எல்லோரும் திகைத்துப்போய் நின்று விட்டார்கள்.

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் செய்த பாவமெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தது.

‘சரி, இதற்கு நாம் தகுதி இல்லை’ என்று ஒவ்வொருவரும் ஒதுங்கிப் போக ஆரம்பித்தார்கள்.

இந்தச் சமயத்தில் யாரோ ஒருவன் வேகவேகமாக அங்கே ஓடிவந்தான். ஆற்றில் குதித்தான். நீரில் மூழ்கும் நிலையில் இருந்தவரிடம் சென்றான். அவரது முடியைப் பிடித்துத் தூக்கினான். அவரைக் காப்பாற்றிக் கரையில் கொண்டுவந்து சேர்த்தான்.

அப்படிக் காப்பாற்றிய அந்த ஆளை... இவர்கள் இருவரும் தனியாக ஒரு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

“நீ யாரப்பா?” என்று எதுவும் தெரியாதவர்கள்  போல் விசாரித்தார்கள்.
“நான் இந்த ஊர் அன்னசத்திரத்தில் வேலை செய்யும் ஒரு சமயல்காரன்” என்று அந்த ஆள் கூறினான்.

“நீ கங்கையில் குளிப்பதுண்டா?” என்று வினவினார்கள்.

“நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன். இருந்தாலும் தினமும் கங்கையில் குளிப்பதில்லை. எப்போதாவது ஒருநாள் அங்கே குளிப்பேன்!” என்றான் சமையல்காரன்.

“கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவம் தொலையும் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது அங்கே இன்றைக்கு கங்கையில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தங்களைப் புண்ணியாத் மாவாக நினைக்கவில்லை. கங்கையில் குளிக்காத நீ... உன்னைப் புண்ணியாத்மாவாக நினைத்து என்னைக் காப்பாற்றுவதாக வந்தாயே... அது எப்படி?” என்று இறைவன் கேட்டார்.

அதற்கு அந்த ஆள், “கங்கையில் குதித்தற்குப் பிறகுதானே உங்களைக் காப்பாற்றப் போகிறோம்... அப்படி குதிக்கும்போதே என் பாவமெல்லாம் போயிருக்குமே...நான் புண்ணியாத் மாவாக ஆகியிருப்பேனே...அதனால் தான் துணிந்து வந்து உங்களைக் காப்பாற்றினேன்!” என்று பதில் கூறினான்.

பிறகு அவனுக்கு இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்தார்களாம்.

கங்கையில் குளித்துக் கொண்டிருப் பவர்களுக்கே தங்களுடைய பாவம் போகும் என்ற நம்பிக்கை பரிபூரணமாக இல்லை! குளிக்காத ஒருவனுக்கு அந்த நம்பிக்கை இருந்தது! அதனால் தான் அவனால் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசிக்க முடிந்தது.

நாம் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதே இந்தக் கதையின் முக்கிய கருத்து.

திங்கள், 8 ஏப்ரல், 2013

தியானத்தில் தடைகள்.

தடைகள் இல்லாத வாழ்க்கைப் பாதை எதுவும் இல்லை.

தடைகளைத் தாண்டாமல் எவரும் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியாது.

“ஒரே தாவலில் யாரும் மேதைகள் ஆனதில்லை. பிறர் அயர்ந்து தூங்கும் ஆழ்ந்த இரவுகளில் உயிரைக் கொடுத்து உழைத்தால் மட்டுமே அவர்கள் அந்த உயர்ந்த நிலையை எட்ட முடிந்தது”. என்று ஆங்கிலக் கலைஞர் லாங்ஃபெலோ கூறியது ஆன்மீக வாழ்க்கையில் முற்றிலும் பொருத்தமானது.


உலகியல் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களும் பிரச்சனைகளும் பலரை ஆன்மிக வாழ்வில் ஈடுபடச் செய்கின்றன.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் எந்தத் தடையுமில்லாமல் உயர்ந்த அனுபூதியைப் பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இங்கேயும்கூட பூதங்கள் போல தடைகள் எழும்போது அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.

ஆன்மிக வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே தடைகளைத் தாண்டிச் சென்றுதான் அதைச் சாதித்தனர். புத்தர் போன்ற பெருமக்கள் கூட பல மன மயக்கங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் தந்திர சாதனைகளும் ஒருவேளை இந்த வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களை இந்திய ஆன்மிகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது.

அவை முறையே 1. ஆதிதைவிகம், 2. ஆதிபௌதிகம், 3. ஆத்யாத்மிகம் எனப்படும்.

1.    ஆதிதைவிகம்: தகாத சூழ்நிலை, திருப்தியில்லாத வேலை, எதிர்பாராத பிரச்சனைகள், மனக் கோளாறுகள் போன்ற காரணம் காணமுடியாத துன்பங்கள் போன்றவை ஆதிதைவிகம் என்பதில் அடங்கும்.
2.    ஆதிபௌதிகம்: பிற மனிதர்களோ அல்லது உயிரினங்களோ விளைவிக்கும் துன்பங்கள் ஆதிபௌதிகம் என்ற பிரிவில் அடங்கும்.
3.    ஆத்யாத்மிகம்: தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ளும்
துன்பங்கள்.
இந்த மூன்றுவகையான துன்பங்களில் முதல் இரண்டும் ஏறத்தாழ சாதகனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை, அதாவது அவனது வினைப்பயனால் விளைபவை.

ஆனால் தவறான மனோபாவங்களில் முதல் இரண்டும் ஏறத்தாழ சாதகனின் காட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை, அதாவது அவனது வினைப்பயனால் விளைபவை.

ஆனால் தவறான மனோபாவங்களாலும் தவறான செயல்களாலும் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆத்யாத்மிகம் ஒரு சாதகனின் கட்டுபாட்டிலேயே இருக்கிறது.

எனவே இந்த மூன்றாவது வகையை ஆத்மசாதகன் எச்சரிக்கையுடன் இருந்து தன் கட்டுப்பாட்டுக்குள் கவனமாக வைத்திருக்க வேண்டும்.

இது போன்ற அகத்தடைகள் நீங்கிவிடும்போது, புறத்தடைகள் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் வலிமையை இழந்து விடுகின்றன.

இந்த அகத்தடைகள் எவை?

இதற்குப் பதிலாக இந்தியாவின் ஒவ்வொரு சமய மரபும் தனக்கென்று ஒரு சொந்தப் பட்டியலை வைத்திருக்கிறது.

சாங்கிய காரிகை நூறு தடைகளைக் கூறுகிறது. இவை விபர்பயம் (தவறான அறிவு), அசக்தி (வலிமையின்மை), துஷ்டி (திருப்தி) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் படுகின்றன.

விபர்பயம் என்பது ஐந்து வகை. அவை அறியாமை, அகங்க்காரம், கவர்ச்சி, வெறுப்பு, வாழ்க்கையில் தீவிரப்பற்று எனப்படும். இவை மேலும் பிரிக்கப்படும்போது சாங்கியக் கருத்தின்படி விபர்பயம் அறுபத்திரண்டு வகைப்படுகிறது.

அசக்திகள் என்பவை இருபத்தெட்டு வகைப்படும். அவை எல்லாவற்றையும் பற்றி இங்கு நாம் தெரிநதுகொள்ள வேண்டியதில்லை. ஆனால் தனது பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒவ்வொரு சாதகனும் (மனிதன்) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் பொருள் தனது பலவீனங்களையே நினைத்து நினைத்து கலங்க வேண்டுமென்பதில்லை.

உடல் பலம் கொண்டவன், மன வலிமை பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதில்லை.

ஆன்ம வலிமை என்பது சாதாரண மன வலிமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
உண்மையான ஆன்மிக அனுபவம் பெறுவதற்கு இந்த ஆன்ம வலிமை இருக்க வேண்டும். இத்தகைய ஆன்ம வலிமையற்ற வர்கள் முதலில் தங்களிடம் ஆன்ம வலிமை இல்லை என்பதை உணர வேண்டும். வெறுமனே உணர்ந்திருந்தால் மட்டும் போதாது; எல்லையற்ற வலிமையின் ஊற்றாக விளங்கும் இறைவனிடம் ஆன்ம வலிமை தந்தருளும்படி கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

துஷ்டி என்பது சிறியச் சிறிய இன்பங்களில் திருப்தி அடைந்துவிடுவது. இங்கு நாம் குறிப்பிடுவது சாதாரணப் புலனின்பங்கலை அல்ல.

ஆன்மிக சாதகன் (மனிதன்) புலனின்ப நாட்டங்கள் களைக் கடந்தவனாக இருக்க வேண்டும்.

சாங்கிய காரிகை என்பது ஒன்பது விதமான துஷ்டிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அவற்றுள் ஒன்பது, ஆரம்ப கால ஆன்மிக முன்னேற்றத்திலும் மிக சிறிய ஆன்மிக அனுபவங்களிலும் திருப்தியடைந்து விடுதல். இதை ஆன்மிக வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகப் பலரிடம் நாம் பார்க்கலாம்.

பெரும்பாலான சாதகர்கள் ஆரம்பத்தில் சிலவருடங்கள் துடிப்புடன் கடினமான ஜபம், தியானம் போன்ற சாதனைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் சிறிது மனத்தூய்மையும், மன அமைதியும் பெற்ற உடனேயே அவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்; பிறகு அவர்களின் வேகம் தடைப் பட்டு நின்றுவிடுகிறது.

மற்றும் சிலர் வெறும் புத்தக ஞானத்துடன் நின்றுவிடுகிறார்கள்;  பல ஆன்மிக நூல்களைப் படிப்பதிலயே அவர்கள் திருப்தி காண்கிறார்கள்.

இன்னும் சிலரோ சில புற மாற்றங்களால் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்; கமண்டலம் வைத்துக் கொள்வது, காவி உடுப்பது, ஏராளமான ஆன்மிக நூல்களை வைத்துக்கொள்வது, அறையில் அழகிய பூஜை மேடை வைத்துக்கொள்வது, பிரசாதம் உட்கொள்வது போன்ற செயல்கள் பலருக்கு திருப்தி தந்துவிடுகிறது.

விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு ‘எதற்கும் ஒரு காலம் நேரம் வரவேண்டும்’ என்று தவறான நம்பிக்கையுடன் இருப்பதில் சிலர் திருப்தி பெற்று விடுகிறார்கள். உண்மைதான், ஆன்மிக முன்னேற்றம் காலத்தைப் பொறுத்துதான்; ஆன்மிக அனுபூதி என்பது எப்போது வரும், எந்த நேரத்தில் வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதற்காக, ‘எல்லாம் நேரப்படி நடக்கும், எதற்கும் அதிஷ்டம் வேண்டும்! என்றிருப்பது கோழைத்தனம்.

(பகவான், கீதை 4.38 –இல் ‘நாளடைவில் யோகத்தில் சித்தி பெறுகிறான் – காலேனாத்மனி விந்தி’ என்று சொல்லும் போது இத்தகைய கோழைத்தனத்தைக் குறிப்பிடவில்லை.)

இது போன்ற கோழைத்தனம் வாழ்வை எதிர்நோக்காமல் தப்பி ஓடுவது மட்டுமல்ல, இதனால் ஆன்மிக  முன்னேற்றமும் வெகுவாகத் தடைப்படுகிறது.

சாங்கிய காரிகை இன்னும் ஒருவிதமான திருப்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதாவது பக்குவமடைவதற்கு முன்பாகவே, தகுதி பெறுவதற்கும் முன்பாகவே செயல் புரிவதைத் துறந்து விடுவதால் பெறும் திருப்தியே அது.

புறத்துறவையும் பலவிதமான தவங்களையும் மேற்கொள்ளும்போது எதையோ சாதித்துவிட்ட எண்ணம் சாதகனுக்கு ஏற்படுகிறது. ‘ஆன்மிக வாழ்க்கை இவ்வளவுதான், இனி எதுவும் தேவையில்லை’ என்ற தவறான முடிவுக்குச் சிலர் வந்து விடுகிறார்கள்.


(உதாரணமாக ‘ஸந்யாஸ க்ரஹமாத்ரேண நாராயணோ பவேத் – வெறுமனே சந்நியசம் பெற்றுக் கொண்டால் போதும், மனிதன் இறைவனாகிவிடுகிறான்’ – இது போன்ற எண்ணம் ஆன்மிக முன்னேற்றத்தை உடனே தடுப்பது மட்டும் அல்ல, சாதகனைக் கிழேயும் தள்ளுகிறது.)

இத்தகைய கீழான திருப்திகளும் நிறைவுகளும் உண்மையான ஆன்மதாகத்தை நீர்க்கச் செய்துவிடுகின்றன;  உண்மையான ஆன்மதாகத்தின் தரத்தை மிகவும் தாழ்த்தி விடுகின்றன; பேரானந்தத்திற்கான, உயர்ந்த நிறைவுக்கான முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகின்றன. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் இதை ஒர் எளிய உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்குகிறார்.

‘வியாபாரிகள் கிடங்குகளில் மூட்டை மூட்டையாக நெல்லைக் குவித்து வைத்திருப்பார்கள்.  ஒவ்வொரு குவியலைச் சுற்றிலும் நெற்பொரியைத் தூவி விடுவார்கள். தானியங்களைத் தின்னவரும் எலிகள் இரவு முழுவதும் இந்தப் பொரியைத் தின்பதிலேயே திருப்தி அடைந்து தானிய மூட்டைகளின் பக்கமே போகாமல் சென்றுவிடுகின்றன; பத்துப்பங்கு பொரியை ஒரு பங்கு நெல் உண்டாக்கும் என்பதையே அவை மறந்துவிடுகின்றன.


“பெரிய தானியக் களஞ்சியங்களின் வழிக்கதவின் முன்னால் எலிகளைப் பிடிப்பதற்காகப் பொரி உருண்டை வைத்தப் பொறிகள் (கம்பியால் செய்யப்பட்ட எலி கூட்டுகள். அதற்குல் பொரி  உருண்டை) வைக்கப்பட்டிருக்கும். எலிகள் பொரி உருண்டையின் வாசனையை நுகர்ந்து களஞ்சியத்தின் அரிசையைத் தின்று களிக்கும் சுகம் அனுபவிப்பதில் ஈடுபடுவதை மறந்து. பொறியில் அகப்பட்டுச் சாகின்றன. ஆத்மாவின் விஷயமும் அதுபோலத்தான். அது தெய்விக ஆனந்தத்தின் வாசற்படியில் நிற்கிறது. அந்தத் திவ்யானந்தமோ கோடிக்கணக்கான விஷயானந்தம் என்ற உலகச் சுகங்கள் ஒன்றாகத் திரண்டன போன்றுள்ளது; என்றாலும் ஆத்மாவானது அந்தப் பேரின்பத்தை அனுபவிக்காமல் உலக விஷயங்கள் என்ற சிற்றின்பத்தில் வசப்பட்டு, மாயையாகிய வலையில் வீழ்ந்து, அதிலேயே இறந்தொழிகிறது.”

இத்தகையத் தடைகளைப் பற்றி பிற மதங்களைச் சேர்ந்த ஞானிகளும் கூறியிருக்கிறார்கள்.


ஆன்மிகச் சிந்தனைகள்.

1.    சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டடு
அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.

நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.

நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.

குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.

ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.

2.     நீ இறைவனுடைய கருனையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.

துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருனை செய். அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருனை செய்தால்
கடவுள் உன்னிடம் கருனை செய்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.


3.    உலகத்திலே நீ இரு. ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

குடும்பத்தில் நீ இரு. ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால்
நீ அழுந்திவிடுவாய்.

வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.

கப்பல் கடலில் இருக்க வேண்டும், கடல்
கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அழிந்திவிடும்.


4.    வேறு எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத நரையை உனக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்றுச் சிந்தித்துப் பார்; ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை;
மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை
அடைய நீ வந்தாய். அதை மறந்தவருக்கு ஓர்
உணர்ச்சி வரும்பொருட்டே இறைவன்
நரையைத் தந்தான்.

நரைக்கத் தொடங்கும்போதாவது உன் ஆவி
ஈடேறும் நெறியில் செல்.

5.    யாசித்து, நெய்யும் பாலும் தயரும் சேர்நத் சிறந்த அன்னதை உண்பதைவிட,  உழைத்து உண்ணும் தண்ணீரும் சோரும் சிறந்தது.

வீரமும் புகழுமில்லாமல் மங்கி நெடுங்காலம் இருப்பதைவிட, வீரமும் புகழும்  பெற்றுச்
சிறிது காலம் வாழ்வது சிறந்தது.

உமிக குவியல் நெடுநேரம் காந்திக்
கருகவதைவிட, தைலமுள்ள மரம்
ஜொலித்துச் சிறிது நேரம் எரிவது சிறந்தது.

6.    புலன்களை வென்றவனே வீரன்.
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.

துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.

விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.

அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.

கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.


7.    அழுக்கு மூன்று வகையாகும்..
i)    மன அழுக்கு. அவை:- பொறாமை, ஆசை, கோபம்,
பகை என்பன.
இந்த மன அழுக்கைத் ‘தியானம்’ என்ற நீரால் கழுவுக.
ii).    வாயழுக்கு, அவை:- பொய், புறங்கூறல், தீச்சொல்
என்பன.
இந்த வாயழுக்கைத் ‘துதி’ என்னும் நீரால் கழுவுக.
iii).    மெய்யழுக்கு. அவை:- கொலை, புலை, பிறன்மனை
நயத்தல், களவு முதலியன.
இந்த மெய்யழுக்கை ‘அர்ச்சனை’ என்னும் நீரால் கழுவுக.

8.    நாவுக்கு அடிமையாகாதே! ‘நல்லுணவு எங்கே? எங்கே?
என்று தேடி ஏங்காதே. இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடை.

நாவுக்கு அடிமையானால் உனது நல் குறையும்.

மீன் சதா உணவாசையினால் ஒழியாமல் தண்ணீர்ல்,
உலாவுகிறது, ஒருசமயம் உணவாசையால் தூண்டிலில் பட்டு இறந்துவிடுகிறது.

9.    பாம்பு, தேள், நட்டுவாக்கிலி முதலிய பெருந் துன்பத்தைச் 
செய்யும் உயிர்களைப் போலவும்.
பெருச்சாளி, எலி, பூனை, நாய் முதலிய துன்பத்தைச் செய்யும் உயிர்களைப் போலவும்,
கொசு, மூட்டை பூச்சி, உணி முதலிய சிறு துண்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலும் நீ இருக்காதே.

அனில் என்ற உயிரை நோக்கு; அது ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்கிறது சேதுபந்தனத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது. அதுபோல் வாழ்தல் வேண்டும்.

10.     பிறர் உன்னை வைவார்களாயின் அந்த வன்சொற்களை இன் சொற்களாக கருது.
நீ எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.
கிடைத்தது கூழாயினும் அதனை
நெய்யன்னமாகக் கருதி உணவு செய்.
பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு.
கசப்புப் பெருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி
உட்கொள். அதனால் மெய்ப்பதம் காண்பாய்.

11.    இப்போது நீ செய்கிற விவசாயத்தின் பயனை அடுத்த
ஆண்டில் நீ அனுபவிப்பாய்.
நன்கு உழைத்துப் பாடுபடுவாயானால் நல்ல பயன் விளையும். அடுத்த ஆண்டு உனக்கு நலமாக இருக்கும்.
சோம்பலாக இருந்து பாடுபடாமல் பொழுது போக்குவாயானால் அடுத்த ஆண்டில்  உனக்கு நன்மை இராது.

அதுபோல் இந்தப் பிறப்பில் நீ செய்யும்
நன்மைகளை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.
நன்மை செய்யாமல் சோம்பியிருந்து, தீங்கு புரிவாயானால், மறுபிறப்பில் உனது வாழ்வு சிறப்படையாது தாழ்வு அடையும்.

12.    பிறவியைத் தருவது பற்றும் அவாவுமாகும் என்று அறி. 

பற்று என்பது:- உனது பொருளில் உள்ளம் வைப்பது.
அவா (ஆசை) என்பது:- பிறர் பொருளில் ஆசை வைத்திருப்பதால் பெருங்கேடு வரும்.
முதலில் ஆசையைத் தொலைத்துவிடு; பின்பு
பற்றையும் ஒழித்துவிடு.

‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’

13.    பணிவு என்ற பண்பு உன் வாழ்க்கையின்
உயிர் நாடி. பணிவு இன்றி வாழ்பவனுடைய
வாழ்க்கைத் திறம் நிச்சயமாக
உயர்ச்சியடையாது.

14.    இன்பமும் துன்பமும் உனது
மனதிலிருந்து உண்டாகின்றன; மனமே
பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகிறது.
தீய மனம் நரகத்தைத் தருகிறது. நன்மனம்
பரகதியைத் தருகிறது.
மனத்தழுக்கு அற்றவரே பெரியார்.
மனத்துக்கண் மாசில்லாமல் இருந்தால் எல்லா
அறங்களும் உண்டாகும். ஆதலினால் உன் மனம்
பளிங்குபோல் இருக்கட்டும்.

15.    ஒரு மனிதனை வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு
நல்லவனென்றோ! தீயவனென்றோ! உறுதி செய்துவிடாதே, உள்ளத்தின் பண்பைக் கண்டு முடிவு செய்.

பலாப்பழம் முள்ளு முள்ளாக மேலே தோற்றமளிக்கும்.
உள்ளுக்குள் சுவையுள்ள சுளைகள் பல உண்டு. வீணை கோணல் – ஆனால் இனிய நாதமுண்டு.

எப்படிப்பழம் மேலே பளபளவென்றிருக்கும்; தொட்டாலே கசக்கும். நாவற்பழம் கருமை; ஆனால் இனிக்கும். பாம்புக்குட்டி பளபள வென்றிருக்கும்; கொடிய விஷத்தைத் தரும். அம்பு நேராக இருக்கும்; உயிரை வாங்கும்.

16.    உன் இனத்துடன் நீ ஒற்றுமையாக இரு. அப்போதுதான்
உனக்கு உயர்வும் மதிப்பும் அழகும் உண்டாகும்.
உன் இனத்தை விட்டு நீ பிரிந்துவிட்டால் நீ எல்லோராலும் வெறுக்கப்படுவாய்.
தலையிலே மயிர் இருக்கும்போது அது
எவ்வளவு அழகாக உள்ளது? இருண்டு, சுருண்டு, நெய்த்து மிக அழகாக அமைந்து மதிப்பும் அழகும் பெறுகிறது. ஆனால் தன் இனத்தை விட்டு ஒரு மயிர் தனித்து வேறுபட்டு வந்துவிடுமானால் அது இகழ்வும் அருவருப்பும் அடைகிறது. இதனை நீ எண்ணிப் பார்த்து ஒற்றுமையாக இரு.

17.    உனது மனைவி மக்களுக்கு நிரம்ப வேண்டும் என்று,
பொய்யும் வஞ்சனையும் செய்து பொருளைத் தேடாதே. அப்படித் தேடுவதனால், நீ தேடிய பொருள் மனைவி மக்களையடைந்து அவர்களுக்கு தீமையை விளைவிக்கிறது. அதனால் வரும் பாவ மூட்டை உன் உயிருடன் தொடர்ந்து வருகிறது.

உடம்புக்குச் சில ஆண்டுகள் தொடர்புடைய மனைவி மக்களுக்காகத் தீய வழியில் பொருள் ஈட்டி வைத்துவிட்டு, நீ கணக்கற்ற பாவத்தைச் சுமந்துகொண்டு போவது எத்துனைப் பெரிய மடமை? எண்ணிப் பார். அறநெறியில் பொருளை ஈட்டு.