புதன், 10 ஏப்ரல், 2013

இறை நம்பிக்கை.

காசி ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் காசி விஸ்வ நாதன், இறைவி காசி விசாலாட்சி. ஒரு நாள் அவர்கள் இருவரும் அமர்ந்து ஆன்மிக விஷயங்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காசி விஸ்வநாதர், “இந்த மனிதர்களை நாம் மிகவும் நம்பிக்கையுடன்தான் படைத்திருக்கிறோம். இருந்தாலும் அவர்களுக்குத் தான் போதிய நம்பிக்கை இல்லை. எதிலும் ஒர் உண்மையான நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!” என்றார்.

அதைக் கேட்டதும் ஜமன்மாதா வாகிய விசாலாட்சி, “என்ன அப்படி சொல்கிறீர்கள்? அதோ பாருங்கள்... எவ்வளவு பேர் காசியைத் தேடி வந்து கங்கையில் நீராடிக் கொண்டிருக் கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் காசியைத் தேடிக்கொண்டு இங்கே வருவார்களா?” என்று வினவினாள்.

“சரி, அதைச் சோதித்துப் பார்க்கலாம்” என்று இருவரும் முடிவு செய்தார்கள்.

உடனே ஒரு திட்டம் போட்டார்கள்.

அந்த திட்டம் இதுதான்:
      “நாம் இருவரும் பக்தர்கள் போன்று உருவத்தை மாற்றிக் கொண்டு கங்கைக் கரைக்குப் போகலாம். நான் கங்கையில் இறங்கி குளிக்கிறேன். சிறிது நேரத்தில் நீர் சுழலில் மாட்டிக்கொண்டதுபோல் நான் நடிக்கிறேன். நீ உடனே கரையிலிருந்து சத்தம் போடு... ‘என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்!’ என்று கூச்சல் போடு... அதோடு இன்னொன்றும் சொல்: ‘யாராவது ஒரு புண்ணியாத்மா என் கணவரிடம் சென்று அவரது முடியைப் பிடித்துத் தூக்க வேண்டும். அப்படி ஒரு சாபம் எங்களுக்கு இருக்கிறது. புண்ணியாத்மா... அதாவது, எந்தப் பாவமும் இல்லாத ஒருவர்தான் அவரைக் காப்பாற்ற முடியும்!
அப்படிப்பட்டவர்கள் யாராவது வெள்ளத்தில் குதித்து என் கணவரைச் சீக்கிரம் காப்பாற்றுங்கள்!’ என்று சொல்லிக் கூச்சல் போடு... பிறகு என்ன நடக்கிறது பார்க்கலாம்!’ என்றார் கடவுள்,

அவ்விதம் ஜகன்மாதாவும் ஜகத்பிதாவும் சாதாரண பக்தர்கள் உருவத்தில் கங்கைக் கரைக்கு வந்தார்கள்.

இறைவன் கங்கையில் இறங்கிகுளிக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் திட்டம் போட்டது போலவே சுழலில் மாட்டிக் கொண்டவர் போல் கத்தினார்.

கரையில் இருந்த விசாலாட்சி தேவி, “ஐயோ, என் கணவரைக் காப்பாற்றுங்களேன்!” என்று அலறினாள்.

பல பேர் ஓடிவந்தார்கள்.

உடனே இறைவி, “பாவம் இல்லாத புண்ணியாத்மா ஒருவரால் தான் என் கணவர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதனால் புண்ணியாத்மா யாராவது அவரிடம் போய் அவரது முடியைப் பிடித்துத் தூக்கினால் அவரைக் காப்பாற்றிவிடலாம்!” என்று தெரிவித்தாள்.

ஜகன்மாதா இப்படி கூறியதும் எல்லோரும் திகைத்துப்போய் நின்று விட்டார்கள்.

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் செய்த பாவமெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தது.

‘சரி, இதற்கு நாம் தகுதி இல்லை’ என்று ஒவ்வொருவரும் ஒதுங்கிப் போக ஆரம்பித்தார்கள்.

இந்தச் சமயத்தில் யாரோ ஒருவன் வேகவேகமாக அங்கே ஓடிவந்தான். ஆற்றில் குதித்தான். நீரில் மூழ்கும் நிலையில் இருந்தவரிடம் சென்றான். அவரது முடியைப் பிடித்துத் தூக்கினான். அவரைக் காப்பாற்றிக் கரையில் கொண்டுவந்து சேர்த்தான்.

அப்படிக் காப்பாற்றிய அந்த ஆளை... இவர்கள் இருவரும் தனியாக ஒரு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

“நீ யாரப்பா?” என்று எதுவும் தெரியாதவர்கள்  போல் விசாரித்தார்கள்.
“நான் இந்த ஊர் அன்னசத்திரத்தில் வேலை செய்யும் ஒரு சமயல்காரன்” என்று அந்த ஆள் கூறினான்.

“நீ கங்கையில் குளிப்பதுண்டா?” என்று வினவினார்கள்.

“நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன். இருந்தாலும் தினமும் கங்கையில் குளிப்பதில்லை. எப்போதாவது ஒருநாள் அங்கே குளிப்பேன்!” என்றான் சமையல்காரன்.

“கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவம் தொலையும் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது அங்கே இன்றைக்கு கங்கையில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தங்களைப் புண்ணியாத் மாவாக நினைக்கவில்லை. கங்கையில் குளிக்காத நீ... உன்னைப் புண்ணியாத்மாவாக நினைத்து என்னைக் காப்பாற்றுவதாக வந்தாயே... அது எப்படி?” என்று இறைவன் கேட்டார்.

அதற்கு அந்த ஆள், “கங்கையில் குதித்தற்குப் பிறகுதானே உங்களைக் காப்பாற்றப் போகிறோம்... அப்படி குதிக்கும்போதே என் பாவமெல்லாம் போயிருக்குமே...நான் புண்ணியாத் மாவாக ஆகியிருப்பேனே...அதனால் தான் துணிந்து வந்து உங்களைக் காப்பாற்றினேன்!” என்று பதில் கூறினான்.

பிறகு அவனுக்கு இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்தார்களாம்.

கங்கையில் குளித்துக் கொண்டிருப் பவர்களுக்கே தங்களுடைய பாவம் போகும் என்ற நம்பிக்கை பரிபூரணமாக இல்லை! குளிக்காத ஒருவனுக்கு அந்த நம்பிக்கை இருந்தது! அதனால் தான் அவனால் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசிக்க முடிந்தது.

நாம் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதே இந்தக் கதையின் முக்கிய கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக