புதன், 10 ஏப்ரல், 2013

தவற்றைத் திருத்திக் கொள்ளும் மனோபாவம்

 செய்வது தவறு!” என்று நாம் செய்த தவற்றைப் பிறர் சுட்டிக்காட்டும் போது, அது நம் தன்மானத்தில் இடிக்கிறது. எனவே நாம் வெட்கப்படுகிறோம்; கோபப்படுகிறோம்.

“அது தவறில்லை. நாம் செய்தது சரி” என்பதற்கு ஆயிரம் சமாதானம் – நொண்டிச் சாக்கு காணபதில் இறங்குகிறோம்.

தவற்றைத் தவறு என்று ஏற்றுக்கொள்வதற்கு அசாத்திய துணிவு வேண்டும்; பெருந்தன்மை வேண்டும்.

ஒரு விஷயம் தவறு என்று உணரும்போது சரியான வழியைக் காண நம் மனம் முயல்கிறது.

தவறு என்று உணராதபோது அல்லது உணர மறுக்கும்போது – நாம் செய்த தவறுக்கு நொண்டிச் சமாதானம் சொல்லும்போது – மனதிற்கு சரியான வழியைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இது காரணமாகக் தவறுகளைக்கூட “சரியானவை” என்று மாறுபட்டுச் சிந்திக்க மனம் பழகுகிறது. மனம் இதனால் குழப்ப மடைகிறது.

டாக்டர் மேக்ஸ்வெல் மாட்ஸ் என்ற மனவியல் அறிஞர் கூறுகிறார்:

“லட்சியம் வழிகாட்ட மனம் நடக்கிறது; தவறு நேரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் சரியான பாதைக்கு வருகின்ற – தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் ஒரு மகத்தான சாதனம்தான் மனம்” என்கிறார் அவர்.

தவறு செய்யாதவர்கள் உலகில் இல்லை.

“தவறிழைப்பது மனித இயல்பு” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி.

தவறிலிருந்து மீள்வதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை.

நாம் செய்யும் தவற்றைக் கூட ‘சரி’ என்று வாதிட முன்வருவது எது? நம் ஆணவம்தான்.

இந்த ஆணவம் – அகங்காரம் – உண்மை நிலவரத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியாத படி நம் கண்ணை மறைக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஜேம்ஸ் ஆலன், “நல்ல முயற்சியினாலும் திறமையினாலும் அடைந்த வெற்றி நிரந்தரமாக இருக்க வேண்டுமானால், அந்த வெற்றி சதா சர்வ நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

“ஆகா! நான் உச்சிக்கு வந்துவிட்டேன். இனியாரும் என்னை அசைக்க முடியாது!” என்று ஆணவத்துடன் அலட்சியப் போக்கைக் கைக்கொள்ளும் தலைவனும் சரி, “எனது நிறுவனம் இந்த ஆண்டு இவ்வளவு லாபத்தை ஈட்டியிருக்கிறது. எங்களை முதலிடத்திலிருந்து யாரும் அசைக்க முடியாது” என்று நினைக்கும் ஒரு நிறுவனத் தலைவனும் சரி – வெகு விரைவில் போட்டியாளரால்  தோற்கடிக்கப் படுவார்கள்.

‘நான் நேற்றுவரை நல்லவனாயிருந்தேன்’ என்பது எடுபடாது. தொடர்ந்து நல்லவராக இருக்கிறோமா என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது; உண்மை இருக்கிறது.

மனிதன் தன்னைத்தானே கண்காணித்துக் கொண்டிருந்தால்தான் முன்னேற முடியும்.

மனிதன் தன்னைத்தானே தவறு கண்ட விடத்து திருத்திக்கொள்ள முன்வந்தால்தான் முன்னேற முடியும்.

வாட்டர்கேட் ஊழலில் குற்றம் நிரூபிக்கப் பட்டபோதிலும், “நான் குற்றவாளியல்ல” என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிச்சன் கடைசியில் பதவி இறங்கி அவமானப் பட நேர்ந்தது. குற்றத்தை அவர் முன்பே ஒப்புக்கொண்டிருந்தால், சட்டமன்றம் அவரை மன்னித்திருக்கக் கூடும்.

“கிழே விழுவது தவறல்ல; மீண்டும் எழுந்து நிற்காததுதான் குறை” என்றார் ஓர் அறிஞர்.

அதேபோல, தெரியாமல் தவறு செய்வது பெரும் பாவமல்ல, தவறு என்று தெரிந்த பிறகும் சரியான வழியில் நடக்கத் தவறுவது தான் பெரும் குறை.

வாழ்க்கை என்பது ஒரு பாடம். தொடர்ந்து அனுபவங்கள் வாழ்க்கையில் நமக்குப் படிப்பினைகளைத் தருகின்றன. அதில் மனம் உண்மையையும் பொய்யையும் பிரித்துப் பார்க்ககவும், மீண்டும் சரியான வழியில் நடந்து செல்லவும் முயல வேண்டும்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த முயற்சி; தொடர்ந்த போராட்டம். வாழ்வு ஒரு தொடர்க் கல்வி.

“இந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வெற்றியாளர்களை ஆராய்ந்தோமானால் யாருமே நூறு சதவிதம் சரியான முடிவெடுத்தவர்களாக இருந்ததில்லை; தவறே செய்யாமல் பூரணத்வம் பெற்ற மனிதர்களாக யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அவ்வப்போது இருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து நம் அனுபவத்திற்கேற்ப, நமது மனச்சாட்சிக்கேற்ப ஒரு முடிவுக்கு வருகிறோம். அது பின்னால் தவறாகப் போகலாம். ஆனால் முடிவெடுத்த சமயத்தில் நியாயமான காரியத்தைச் செய்தோமா என்பதுதான் கேள்வி.

“வெற்றிகளிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் படிக்க முடியாது; தவறிலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ள முடியும்” என்கிறார்கள் அறிஞர்கள்.

நேரான பாதை என்ற முக்கிய தடத்திலிருந்து தவறுகள் நம்மை வேறு தடங்களில் இறக்கி விடுகின்றன. அதை உணர்ந்தவுடன் நாம் நமது வழியைத் திருப்பி, மீண்டும் போக வேண்டிய சரியான முக்கிய தடத்திற்கு வந்து சேருகிறோம்.

ஆத்மா முன்னேற வாய்ப்பளிக்கப்பட்ட இடம். அதை உணர்ந்து வாழ்கிறோமா என்பதைத்தான் அடிக்கடி சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.

“தவறுகளாகவே என் வாழ்க்கை அமைந் திருக்கிறதே!” என்று புலம்பத் தேவையில்லை. சிலருக்கு தவறுகளிலிருந்து மீள்வதற்கு அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது. சிலர் ஓரிரு தவறுகளிலேயே உண்மைகளைப் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.

“தவறுகளை வாழ்த்துங்கள்; கெட்ட சூழ்நிலை தோன்றினால் அது மாறிவிடும் என்று ஆசி கூறி நம்பிக்கைத் தெரிவியுங்கள்.”

“முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாகவே நீ நினைத்தாலும் அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். நீ அப்படிப் பட்ட தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று நம்புகிறாயா? எனவே நீ செய்த தவறுகளை வாழ்த்து. அந்தத் தவறுகள் உன்னை அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக