ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பாவமும் புண்ணியமும்

துறவி ஒருவருக்கு நரகத்தையும் சொர்கத்தையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

நேராக நரகத்திற்குச் சென்றார். அங்கே ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் இல்லாத நொண்டி ஒருவன் இந்தான்.

அவனிடம், “நீ யார்? நீ ஏன் நரகத்தற்கு வரவேண்டி வந்தது?” என்று கேட்டார்.

“துறவியாரே! நான் மண்ணுலகில் பெருஞ் செல்வனாக இருந்தேன். நிறையப் பாவங்களைச் செய்ததால் இங்கே நரகத்தில் துன்பப்படுகிறேன்” என்றான் அந்த நொண்டி.

துறவி நரகத்தை விட்டு நீங்கிச் சொர்க்கத்திற்குள் நுழைந்தார். அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவரும் ஒவ்வோரிடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார்.

ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் தனியாக இருந்தது. அதைப் பார்த்துத் துறவி பெருவியப்படைந்தார். உடனே பக்கத்திலிருந்த ஒருவனை அழைத்து, “ஆள் இல்லாமல் ஒரு கால்  மட்டும் சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “துறவியாரே! இந்தக் காலுக்கு உரியவன் கொடிய பாவி. அவன் செய்யாத பாவம் இல்லை. ஆனாலும் ஒரே ஒரு முறை தாகத்தால் தவித்த ஒரு மாட்டிற்கு இரங்கித் தொலைவில் இருந்த தண்ணீர்த் தொட்டியை இந்தக்க காலினால் உதைத்து அதனருகில் தள்ளினான். அந்தப் புண்ணியத்தால்தான் இந்த ஒரு கால் மட்டும் இங்கு உள்ளது. அவனோ நரகத்தில் துன்பப்படுகிறான்” என்று விளக்கம் தந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக